திருப்பூர் : வீரபாண்டி
பகுதியில் திறந்தவெளியிலும், சாக்கடை, ஓடை பகுதிகளிலும் கோழி இறைச்சி
கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு,
துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி,
53வது வார்டுக்கு உட்பட்ட வீரபாண்டியில் ஓடை உள்ளது. இப்பகுதியில்
சேகரமாகும் கழிவுநீர் ஓடையில் விடப்படுவதால், செடிகள், முள் மரங்கள்
அதிகளவில் வளர்ந்துள்ளன. இவற்றை சுத்தம் செய்யாததால், புதர்போல்
காட்சியளிக்கிறது. வீரபாண்டியில் உள்ள கோழி இறைச்சி கடைக்காரர்கள், இறைச்சி
கழிவுகளை, பள்ளத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொட்டுகின்றனர். அவற்றை
உட்கொள்வதற்கு, 10க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன.
தொடர்ச்சியாக கோழி இறைச்சி கழிவை கொட்டுவதால், துர்நாற்றம் வீசுவதால்,
இவ்வழியாக செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். மக்கள் கூறுகையில்,"கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள், இப்பள்ளத்தில் உள்ள கழிவுநீரிலும், பள்ளத்தின் அருகே
திறந்தவெளியிலும் கழிவுகளை கொட்டி வருகின்றனர். சம்பந்தப்பட்ட கடை
உரிமையாளர் மீது, அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தால், பள்ளத்தில் கொட்ட
மாட்டார்கள். "சுகாதார சீர்கேட்டால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்,
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.