திருப்பூர் : ""பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நீதி கிடைக்கும் வகையில், தனி மற்றும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்,'' என, மா.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.திருப்பூரில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:மின்வெட்டு, நூல் விலை, உற்பத்தி செலவு அதிகரிப்பு, உலகளாவிய நெருக்கடியால் திருப்பூர் தொழில்துறை முடங்கியுள்ளது; லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சு ஏற்றுமதிக்கு தடை செய்வதோடு, பஞ்சுக்கு ஆதார விலை நிர்ணயிக்கவும்; ஏற்றுமதியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், உள்நாட்டு நுகர்வை விரிவுபடுத்தவும்; தொழில், விவசாயத்துக்கு தேவையான டீசலுக்கு மானியம் வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2011ல், 6.7 சதவீதமாக இருந்த உற்பத்தி, 2012ல், 0.1 சதவீதமாக குறைந்துள்ளது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாக ஐந்து லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, இதை திரும்ப பெற்று, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு, தொழில், வேலைவாய்ப்புகளை அதிகரித்து, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். மாதம் 35 கிலோ உணவு தானியம் வழங்கக்கோரியும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும், மார்ச் 19ல், டில்லியில் பேரணி நடத்த உள்ளோம்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் டில்லியில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து பகுதியிலும் நடக்கிறது. இதற்கு காரணம், விரைந்து தண்டனை பெற்று தராதது தான். கொலை குற்றத்துக்குகூட, 35 சதவீதம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கற்பழிப்பு வழக்குகளில் 27 சதவீதத்துக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நீதி கிடைக்கும் வகையில், தனி மற்றும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் 2014ல்தான் வர உள்ளது. அதற்குள் பல மாற்றங்கள் வரும். பிரதமர் வேட்பாளர்கள் அதிகம் பேர் வருவர். அப்போது, கூட்டணி, ஆதரவு குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.