சென்னை:வைகுண்ட
ஏகாதசியை முன்னிட்டு, சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில், சொர்க்கவாசல்
திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொண்டு பெருமாளை தரிசித்தனர்.பெருமாளின் திருவடியை சரண் அடைந்த உயிர்,
எப்படி வீடுபேற்றை அடையும் என்பதை, பெருமாளே விளக்கி காட்டும் நிகழ்ச்சி
தான் சொர்க்கவாசல் திறப்பு. இதில், நம்மாழ்வாருக்கு பெருமாள் காட்சி
கொடுப்பார்.சென்னையின் முக்கிய பெருமாள் கோவில்களான திருவல்லிக்கேணி
பார்த்தசாரதி சுவாமி, மயிலாப்பூர் மாதவ பெருமாள், கேசவ பெருமாள்
திருநீர்மலை ரங்கநாத பெருமாள், பூந்தமல்லி வரதராஜ பெருமாள், தாம்பரம்
கோதண்ட ராமர், பாரிமுனை சென்ன கேசவ பெருமாள், வில்லிவாக்கம் சவுமிய தாமோதர
பெருமாள், புரசைவாக்கம் சீனிவாச பெருமாள், அயனாவரம் கரியமாணிக்க பெருமாள்,
அமைந்தகரை வரதராஜ பெருமாள், கோயம்பேடு வைகுண்டவாச பெருமாள், பெரம்பூர்
வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில், நேற்று சொர்க்கவாசல்
திறப்பு நிகழ்ச்சி நடந்தது.இவை தவிர, நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேஸ்வர
பெருமாள், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, எழும்பூர் ஸ்ரீநிவாச பெருமாள்
கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.இதையடுத்து, பெருமாள்
கோவில்களில் இராப்பத்து உற்சவம் தொடரும். 10 நாட்களுக்கு இந்த உற்சவம்
நடக்கும். இதில், நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்கள் பெருமாள் முன்
சேவிக்கப்படும்.