புதுச்சேரி:வைகுண்ட
ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோவில்களில்
சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.முதலியார்பேட்டை: வன்னிய பெருமாள்
திருக்கோவில் அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் ஏகாதசி
உற்சவம் கடந்த 16ம் தேதி துவங்கியது. நேற்று முன் தினம் காலை 10 மணிக்கு
மூலவர், உற்சவம், ஆழ்வாருக்கு திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை 4.30
மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.முத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டை,
ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நேற்று காலை
5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சர்வ அலங்காரத்தில் பெருமாள்,
பரமபத வாசல் வழியாக எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வில்லியனூர்: பெருந்தேவித் தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள்
கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம், கடந்த 14ம்
தேதி துவங்கியது. நேற்று முன்தினம் (23ம் தேதி) இரவு 9 மணிக்கு,
பெருமாளுக்கு தசமி திருமஞ்சனம் நடந்தது.
நேற்று காலை 5 மணிக்கு சொர்க்க
வாசல் திறக்கப்பட்டது.கூடப்பாக்கம்: வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கத்தில்
உள்ள, தென்கலை வரதராஜப் பெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி உற்சவத்துக்கு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு
சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது.
நேற்று காலை 5.20 மணிக்கு சொர்க்க வாசல்
திறந்து, சுவாமி வீதியுலா நடந்தது.திருக்கனூர்: அடுத்த தமிழகப் பகுதியான
திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆராமுதர் பெருமாள் கோவில் வைகுண்ட
ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு சொர்க்கவாசல்
திறக்கப்பட்டது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பத்கர்களுக்கு
அருள்பலித்தார்.பாகூர்: நவதேவஸ்தான கோவில்களில் ஒன்றான லட்சுமி நாராயண
பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சொர்க்க வாசல்
திறக்கப்பட்டது. இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சுவாமிக்குச்
சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு ஸ்ரீதேவி-பூதேவியுடன்
லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்
பாலித்தனர்.லாஸ்பேட்டை: திரவுபதியம்மன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை
முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. விழாவையொட்டி நேற்று பெருமாள்
கருடசேவையில் வீதியுலா நடந்தது.நல்லாத்தூர்: பிரசித்திப் பெற்ற வரதராஜப்
பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று காலை
5.30 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு சந்தனம்,
தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 7 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியுடன்
பெருமாள் வீதியுலா நடந்தது. பகல் 12 மணிக்கு சன்னதி புறப்பாடும், 12.30
மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண
பெருமாள் கோவிலில் நேற்று காலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு
நிகழ்ச்சி நடந்தது. பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை முடிந்து நித்ய
கல்யாண பெருமாள் எழுந்தருளினார்.