புதுச்சேரி:புதுச்சேரி படைப்பாளியான தங்கப்பா இரண்டாவது முறையாக இந்தாண்டும் சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் நேருவால் நிறுவப்பட்ட மத்திய அரசு நிறுவனமான சாகித்ய அகாடமி, தேசிய அளவில் சிறந்த படைப்பாளிகளையும், மொழி பெயர்ப்பாளர்களையும் தேர்வு செய்து ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரத்துடன் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றது.புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் தங்கப்பா, சங்க காலத் தமிழ்க் கவிதைகளான குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றினை, அகநாநூறு, கலித்தொகை, ஐந்திணை ஐம்பது போன்ற அகநூல்களில் இருந்தும் புறநானூறு என்ற நூலில் இருந்தும் சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து "லவ் ஸ்டாண்ட்ஸ் அலூன்' என்ற நூலை 2010 ஆண்டு பெங்குவின் இந்தியா நிறுவனம் சார்பில் வெளியிட்டார். தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இந்நூல், இந்தாண்டு (2012) சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தமிழ் மொழிக்கும் இலக்கிய உலகிற்கும் பெருமை சேர்த்துள்ளது. தங்கப்பா எழுதிய கவிதை நூலான "சோலை கொல்லை பொம்மை' நூலுக்கு குழந்தை இலக்கிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது 2011ம் ஆண்டு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக சாகித்திய அகாடமியின் விருதினைப் பெற்ற தங்கப்பாவுக்குத் தமிழக மற்றும் புதுச்சேரி இலக்கிய ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.