புதுச்சேரி:"நேரடி
பண பரிமாற்ற திட்டம், 2013ல், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்' என,
மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார். மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள,
"உங்கள் பணம்... உங்கள் கையில்...' என்ற, நேரடி பணப் பரிமாற்ற திட்டம்,
நாடு முழுவதும் 51 மாவட்டங்களில், ஜன., 1ம் தேதி முதல், செயல்படுத்தப்பட
உள்ளது. இதில், புதுச்சேரியும், ஒரு மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தை செயல்படுத்துவது, தொடர்பாக, புதுச்சேரி அரசு அதிகாரிகள்
மற்றும் பாங்க் அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம், ஜிப்மர் மருத்துவமனை
கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது. மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம்
பங்கேற்று, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ரங்கசாமி, இந்தியன்
பாங்க் தலைவர் பாசின், மத்திய அரசின் நிதிச் செயலர் மிட்டல், புதுச்சேரி
தலைமைச் செயலர் சத்தியவதி உள்ளிட்டோர், பங்கேற்றனர்.கூட்டத்தில், மத்திய
அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:மத்திய அரசு, பல திட்டங்களின் கீழ்,
பயனாளிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. பெரும்பாலான திட்டங்களில்,
பயனாளிகளுக்கு, ஏதோ ஒரு வகையில், பணம் போய் சேருவதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
சில திட்டங்களில், அரசு அளிக்கும் மானியம், பணமாக
கண்ணுக்கு தெரியாது. உதாரணமாக, சமையல் எரிவாயு சிலிண்டரை குறிப்பிடலாம்.
கடையில் 400 ரூபாய் கொடுத்து, சிலிண்டரை பயனாளிகள் வாங்குகின்றனர். ஆனால்,
அதன், அடக்கவிலை 900 ரூபாயாகும். 500 ரூபாயை, மத்திய அரசு மானியமாக
வழங்குகிறது. இது மக்களுக்கு தெரியாது.ரேஷன் கடையில் அரிசி,
கோதுமை,
சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கும், மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
இது கண்ணுக்கு புலப்படாது. இந்த பயன்கள், மக்களை சரியாக சென்றடையவில்லை.
மத்திய அரசு, பல வழிகளில் 2 லட்சம் கோடி ரூபாயை, மானியமாக வழங்குகிறது.
இந்த பணம், பயனாளிகளுக்கு, முழுமையாக சென்று சேர வேண்டும். இதற்காக, புதிய
திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இந்த திட்டத்தை செயல்படுத்த, ஒவ்வொரு
பயனாளிக்கும் பாங்க் கணக்கு இருக்க வேண்டும். பாங்க் கணக்குடன், பயனாளியின்
தனிப்பட்ட அடையாள எண்ணை இணைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பயனாளிக்கு,
மத்திய அரசு என்ன பணம் தருகிறதோ, அதற்கான உத்தரவை பாங்குகளுக்கு அனுப்பி
விட்டால், பணம் பயனாளிக்கு சென்று சேர்ந்து விடும். இந்த பணியை,
தொழில்நுட்பம் எளிதாக செய்து முடிக்கும்.
இதில் ,அலைகழிப்பு கிடையாது.
பணம் குறைந்து விட்டது என்ற பேச்சுக்கு இடமில்லை. உத்தரவு போய் சேர்ந்து
விட்டால், மறு விநாடியே பணம் சென்று சேர்ந்து விடும். இதை ,யாரும் தடை
செய்ய முடியாது. இதில் தவறு, ஊழல், இடையூறுகளுக்கு இடமில்லை. ஜனவரி 1ம்
தேதியன்று, நேரடி பணப் பரிமாற்ற திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி தயாராகி
விடும் என்ற நம்பிக்கை உள்ளது. 2013ம் ஆண்டு முடிவதற்குள், புதிய
திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும், என்பது எங்கள்
நோக்கமாகும்.இவ்வாறு சிதம்பரம் பேசினார்.