சிங்கப்பூர்,
ஹாங்காங் நகரங்களை போல, சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை ஒட்டிய
பகுதிகளில் கட்டடங்களுக்கான தளபரப்பு குறியீட்டை (எப்.எஸ்.ஐ.,)
அதிகரிக்கலாம் என, சி.எம்.டி.ஏ.,விடம், ஐ.டி.டி.பி., ஆய்வு நிறுவனம்
பரிந்துரைத்துள்ளது.
ஆய்வு
சென்னையில் நகர எல்லைகளுக்குள், வீடுகளின்
விலையை குறைக்க, அடுக்குமாடி கட்டடங்களுக்கான தள பரப்பு குறியீட்டை
அதிகரிக்கலாம் என, நகரமைப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தற்போது இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சென்னையில் பெரும்பாலான
பகுதிகளை இணைக்கும் வகையில்,
45 கி. மீ., தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை ஒரு கூடுதல் போக்குவரத்து வசதியாக கருத்தில் கொண்டு, இதன் வழித்தடத்தை ஒட்டி இரு புறமும்,
500
மீ., வரையுள்ள பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் குடியேறுவதை
ஊக்குவிக்கும் வகையில் கட்டட விதிகளில் சலுகைகள் வழங்க சி.எம்.டி.ஏ.,
முடிவு செய்தது.
இதன் ஒரு பகுதியாக, இந்த வழித்தடத்தில் கட்டடங்களுக்கான
தள பரப்பு குறியீட்டை அதிகரிக்க முடிவு செய்தது. இதற்கான சாத்திய கூறுகளை
ஆய்வு செய்யும் பணியில், போக்குவரத்து மேம்பாட்டு கொள்கை ஆய்வு நிறுவனம்
(ஐ.டி.டி.பி.,) ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக, இந்த
நிறுவனம் தனது ஆய்வை நடத்தி வரு கிறது. மெட்ரோ ரயில் வழித்தடங்களில் தள
பரப்பை அதிகரிக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த ஆய்வு கூட்டம்,
கடந்த மாதம் நடைபெற்றது.
பரிந்துரை
இதுகுறித்து சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
இதற்கான ஆய்வு பணியை ஏற்றுள்ள ஐ.டி.டி.பி., நிறுவனத்தை சேர்ந்தோர் தங்களது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர்.
மெட்ரோ
ரயில் வழித்தடத்தில் கட்டட விதிகளை தளர்த்துவது, தள பரப்பு குறியீட்டை
அதிகரிப்பதற்கான பல்வேறு பரிந்துரைகள் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின்
பிற நகரங்கள் மட்டுமல்லாது, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற சர்வதேச
நகரங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை ஆய்வு செய்து, சென்னைக்கான புதிய தள
பரப்பு குறியீட்டு விகிதங்களை இறுதி செய்யலாம்.
மேலும், தள பரப்பு
குறியீட்டை அதிகரிப்பதற்கான திட்டமிட்ட யுக்தியுடன், இதற்கான வரைவு
திட்டத்தை உருவாக்கலாம். இதேபோல, புதிய கட்டடங்கள் கட்டப்படும் போது, அதில்
அனுமதிக்கப்படும் அடித்தள வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு
பரிந்துரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதன்
அடிப்படையில் இறுதி அறிக்கை தயாரிக்க தேவையான பரிந்துரைகள், சி.எம்.டி.ஏ.,
தரப்பில் இருந்து, அந்த நிறுவனத்துக்கு விரைவில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -