காவிரி நீர் வராததால், காரைக்காலில் பயிரிடப்பட்டுள்ள, 9000 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் கருகி வருகின்றன.
காவிரியின் கடைமடைப் பகுதியில், காரைக்கால் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு, விவசாயமே பிரதான தொழிலாகும். சம்பா, குறுவை, தாளடி சாகுபடிகள் காவிரி நீரை நம்பியே நடக்கிறது.இங்கு, ஆண்டுதோறும் 15 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடப்பது வழக்கம். ஆண்டுக்கு 25 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காரைக்காலை பொறுத்தவரை, காவிரி நீரை நம்பியே விவசாயம் நடக்கிறது. ஆற்றில் காவிரி நீர் வந்தால் மட்டுமே, சாகுபடி செய்ய முடியும். ஆற்றில் தண்ணீர் வராவிட்டால், வயல்கள் தரிசாக மாறி விடும்.
ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் காரைக்காலுக்கு வருவதுபோல் காட்சி அளித்து, கானல் நீராக மறைந்து விடுவது தொடர் கதையாக உள்ளது. காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்புப்படி, காரைக்காலுக்கு 6 டி.எம்.சி., தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், காவிரியில் நீர் திறந்து விடுவதற்கு, கர்நாடகா மறுத்ததால், காரைக்கால் விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள முடியவில்லை.
9000 ஏக்கர்
இதற்கிடையில், கடந்த செப்டம்பரில், தமிழகத்திற்கு, விநாடிக்கு, 9000 கன அடி நீரை கர்நாடகா திறந்து விட்டது. அரசலாறு, வாஞ்சியாறு, நாட்டாறு, நூலாறு வழியாக செப்டம்பர் மாத இறுதியில், காவிரி நீர் காரைக்காலைத் தொட்டது. இதை நம்பி 9000 ஏக்கரில் சம்பா மற்றும் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடியை விவசாயிகள் துவக்கினர்.
விவசாயிகளின் எதிர்பார்ப்பு சில நாட்களிலே தகர்ந்து போனது. 3 நாட்களுக்கு பின் ஆறுகளில் தண்ணீர் வருவது முற்றிலுமாக நின்றது. இதனால், காவிரி தண்ணீரை நம்பி சாகுபடியை துவக்கிய விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது.
ஒரு சில இடங்களில் மட்டும், பாசிக் நிறுவனத்தின் போர்வெல் மூலம் விவசாயிகளுக்கு, மணிநேரம் கணக்கு வைத்து, நீர் பாசனம் செய்யப்படுகிறது.
டீசல் பம்ப் செட்
நெடுங்காடு, பொன்பேத்தி, அம்பகரத்தூர், திருநள்ளார் உள்ளிட்ட பல பகுதிகளில் காய்ந்துவரும் விவசாய நிலங்களை காப்பாற்ற, பிரதான ஆற்றின் கரையோரமாக உள்ள விவசாய நிலங்களுக்கு, வாய்க்கால்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை டீசல் பம்புசெட் மூலம் இறைத்து வருகின்றனர்.
வாய்க்கால்கள் இல்லாத பகுதியில் உள்ள பயிர்கள் காய்ந்து வருகின்றன. நெடுங்காடு, அண்டூர், வடமட்டம், புத்தகுடி, பொன்பேத்தி உள்ளிட்ட இடங்களில் சம்பா விவசாய நிலங்கள் காய்கின்றன.
காவிரி தண்ணீரை காரைக்காலுக்கு கொண்டு வரவும், இல்லாவிட்டால், விவசாய பாசனத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நமது சிறப்பு நிருபர்-