சென்னை : உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளை, சுகாதார துறை கள ஆய்வு செய்யாமலேயே, வருவாய் துறை மூலம், அவற்றுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை மாநகராட்சி கைவிட்டு உள்ளது.""உரிமம் வழங்குதல், நடவடிக்கை எடுத்தல் என, அனைத்தும் வருவாய் துறையிடம் இருந்து, சுகாதார துறைக்கு மாற்றப்பட்டு, முறைப்படுத்தப்படும்,'' என, மேயர் சைதை துரைசாமி தெரிவித்து உள்ளார். வெளிமாநிலத்தில் இருந்து சுகாதாரமற்ற இறைச்சி வரத்து அதிகரித்த நிலையில், அதை தடுக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டது. தொடர்ந்து, ஒரு சில இறைச்சி விற்பனை கடைகள் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. சுகாதார துறையினர் ஆய்வு செய்தபோது, கால்வாயோரம், சாலையோரங்களில் எந்த சுகாதார ஏற்பாடும் இல்லாமல், இறைச்சி கடைகள் இருந்தன. மாநகராட்சியில், இதுபோன்ற கடைகளுக்கு சுகாதார துறை தான் உரிமம் வழங்க வேண்டும். 2007ம் ஆண்டில் இந்த நடைமுறையை மாநகராட்சி மாற்றி, வருவாய் துறையிடம் அளித்ததால், சுகாதார துறையினரின் ஆய்வு இல்லாமலேயே, பணம் கட்டிய உடன், உரிமம் வழங்கப்பட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதனால், சுகாதார துறையினரால் நேரடி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இது தொடர்பாக, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவையும் மாநகராட்சி செயல்படுத்தவில்லை.சுட்டி காட்டிய "தினமலர்'இதில் ஏற்படும் நிர்வாக குளறுபடிகள் குறித்தும், நடைமுறை சிக்கல் குறித்தும், "தினமலர்' நாளிதழில், கடந்த அக்., 10ம் தேதி, சிறப்பு செய்தி வெளியானது. இது தொடர்பாக, தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டும் வந்தன. இந்த நிலையில், நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காணப் பட்டு உள்ளது. இனியாவது...நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனரமேஷ், இது தொடர்பான கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:
கடந்த 2007ம் ஆண்டில், ஓட்டல்கள், சிற்றுண்டி சாலைகள், டீ கடைகள், டிபன் கடைகள் போன்றவற்றுக்கு உரிமம் வழங்குவதை சுகாதார துறையிடம் இருந்து, வருவாய் துறைக்கு மாநகராட்சி மாற்றியது. சுகாதார துறை கள ஆய்வு நடத்தாமலேயே, இஷ்டம் போல் உரிமங்கள் வழங்கப்பட்டன. அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத நிலையில், உரிமங்களை ரத்து செய்ய சுகாதார துறையால் முடியவில்லை. இந்த நடைமுறைக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, முறையான வழிகாட்டுதல்களை வகுத்து, நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், உணவகம், சிற்றுண்டி சாலை, டீக்கடைகள், இறைச்சி கடைகளுக்கு உரிமம் வழங்குதல், நடவடிக்கை எடுத்தல் எல்லாம் இனி, ஒற்றை சாளர முறையில் மேற்கொள்ளப்படும். வருவாய் துறையிடம் உள்ள அனுமதி வழங்கல், நடவடிக்கை எடுத்தல் அதிகாரங்கள் இனி, சுகாதார துறைக்கு மாற்றப்படும். இதனால், விதிமுறைப்படி சுகாதாரமான முறையில் இயங்காத கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சியின் இந்த நல்ல முடிவு, "இனியாவது, சுகாதாரமான உணவு கிடைக்குமா' என்ற, எதிர்பார்ப்பை சென்னைவாசிகள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. கிடைத்துள்ள புதிய அதிகாரத்தை வைத்து, சுகாதார துறை துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
இறைச்சி கடைகளுக்கான விதிமுறைகள் என்ன? கடையின் தரை மற்றும் சுவர்கள், எளிதில் சுத்தம் செய்யப்படும் வகையில் இருக்க வேண்டும்.கழிவுகளை சேகரிக்க, மூடியுடன் கூடிய குப்பை தொட்டி வைக்கப்பட வேண்டும்.கழிவு நீரை வெளியேற்ற, முறையான இணைப்பு இருக்க வேண்டும்.ஈ, பூச்சி தொல்லை ஏதும் ஏற்படாத வகையில், கடையில் கம்பி வலையுடன் கதவுகள் இருக்க வேண்டும்.பணி செய்வோருக்கு, தொற்று நோய் ஏதும் இல்லை என, மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும்.மாநகராட்சி இறைச்சி கூடத்தில் வெட்டப்பட்ட, இறைச்சியையே விற்க வேண்டும்.இறைச்சி கூடத்திலிருந்து இறைச்சியை எடுத்து செல்ல, மூடியுடன் கூடிய அலுமினிய பெட்டிகளை பயன்படுத்த வேண்டும். திறந்த நிலையில், சைக்கிள் அல்லது வேறு வண்டிகளை பயன்படுத்தல் கூடாது.