சென்னை : "பூங்காக்கள் அனைத்தும், அதிகாலை 5:00 மணிமுதல், இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும்' என, மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். மாநகரில் உள்ள 260 பூங்காக்களும் இதுவரை அதிகாலை 5:00 - 10:00 மணி வரையும், மாலை 4:00 - 8:00 மணி வரை மட்டுமே திறந்து வைக்கப்பட்டிருந்தது. இனி, அவை, அதிகாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்து வைக்கப்படும் வகையில், நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஜெ.சி.டி.பிரபாகரன் எம்.எல்.ஏ., (வில்லிவாக்கம்) பேசும்போது,""பூங்காக்கள் 8:30 மணி வரை திறந்திருந்தால் தொழிலாளர்களுக்கு வசதியாக இருக்கும்,'' என்றார். இதையேற்று கொண்ட மேயர் சைதை துரைசாமி, ""பூங்காக்கள் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும். அதற்குரிய திருத்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்படும்,'' என்றார்.