சென்னை : ரயிலில் பெண்கள் பெட்டியில் கூடுதல் பாதுகாப்பிற்கு, இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாதாரண உடையில், பெண் போலீசார் பயணம் செய்து, கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.சென்னையில், புறநகர் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. இவற்றில் பெண்களும் ஈடுபடுகின்றனர்.இதில், இந்தாண்டு மட்டும், 10 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், பெண்கள் பெட்டியில், கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, எழும்பூர் ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., தில்லைநடராஜன் கூறியதாவது:சென்னை கடற்கரை - பழவந்தாங்கல் வழியிலும், பழவந்தாங்கல் - முண்டியம்பாக்கம் வழியிலும் பெண் போலீஸ் எஸ்.ஐ., தலைமையில் பத்து பெண் போலீசார் கொண்ட, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இவர்களில் பலர் மாறுவேடத்தில் பயணிகளோடு, பயணிகளாக பெண்கள் பெட்டியில் பயணம் செய்து, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.