புதுச்சேரி : "நிதி நெருக்கடியால், மக்கள் நலத் திட்டங்களைக் குறைக்கும் அபாயம் எழுந்துள்ளது' என, இந்திய கம்யூ., செயலாளர் விசுவநாதன் கூறினார்.
நிருபர்களிடம், அவர் நேற்று கூறியதாவது:
நேரடி
பணப் பரிமாற்றத் திட்டம், பொது வினியோக திட்டத்தைச் சீர்குலைத்து விடும்.
"உங்கள் பணம், உங்கள் கையில்' என்பது ஏமாற்று கோஷமாகும். பதுக்கி வைத்துள்ள
கருப்புப் பணத்தை எடுத்து மக்களிடம் தரலாம்.
புதுச்சேரியில் ஆதார்
கார்டு வழங்குவதில் பல குறைபாடுகள் உள்ளன. முதல்கட்டமாக, போட்டோ
எடுத்தவர்களுக்கு, 60 சதவீத கார்டுகள் இதுவரை வழங்கப்படவில்லை. இரண்டாவது
கட்டமாக, குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் போட்டோ எடுத்தனர்.
இதில் ஒருவருக்கும் ஆதார் கார்டு தரப்படவில்லை.
இந்நிலையில், ஆதார்
கார்டு எடுப்பதற்கு மக்களை அலைகழிக்கின்றனர். இதனால், போராட்டம் நடத்தும்
நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது, அரசின் நிர்வாக குளறுபடிகளைக்
காண்பிக்கிறது.
அரசு துறைகளில் 40 சதவீதம் செலவுகளைக் குறைக்க வேண்டும்
என, நிதித் துறை செயலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். புதுச்சேரிக்கென
பொதுக் கணக்கு துவக்கும்போதே, இந்திய கம்யூ., கட்சி எச்சரித்தது. தற்போது,
கடன் வாங்கும் தகுதியைப் புதுச்சேரி இழந்து விட்டது. வாங்கிய கடனையும்
திருப்பி தர முடியாத நிலை. மக்கள் நலத் திட்டங்களையும் குறைக்கும் அபாயம்
எழுந்துள்ளது.
என்.ஆர். காங்., கட்சியும், காங்., கட்சியும் சேர்ந்து
மக்களை ஏமாற்றுகின்றனர். சோனியாவிற்கு, முதல்வர் நன்றி தெரிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது. கலெக் டர் அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் 144
தடையுத்தரவு போட்டுள்ளனர். மக்கள் தங்க ளது பிரச்னைகளுக்காக போராட் டம்
நடத்துகின்றனர். அதைத் தடுக்க முயற்சி நடக்கிறது.
காரைக்காலுக்கு
காவிரி தண்ணீர் வராததால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இலவசமாக டீசல்
வழங்கப்படும் என்றனர். ஆனால், டீசலும் இதுவரை வழங்கப்படவில்லை. காரைக்கால்
விவசாயிகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட, சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பில், பல குறைபாடுகளும், தவறுகளும் உள்ளன.
இவ்வாறு விசுவநாதன் கூறினார். தேசியக் குழு உறுப்பினர் நாரா கலைநாதன், நிர்வாகிகள் அபிஷேகம், கீதநாதன், முருகன் உடனிருந்தனர்.