சென்னை : சென்னை அடுத்த மணலி யில், மத்திய அரசுக்கு சொந்தமான உரத் தொழிற்சாலையில் இருந்து, அளவுக்கதிகமாக வெளியேறிய அமோனியா வாயு கசிவால், அப்பகுதி மக்கள், மூச்சுத் திணறலால் அவதிப் பட்டனர்.இரவு நேரத்தில்சென்னை அடுத்த
மணலியில், மத்திய அரசின் உரத் தொழிற்சாலை (எம்.எப்.எல்.,) உள்ளது. இங்கு, வாரத்திற்கு இருமுறை, இரவு நேரத்தில், அமோனியா வாயு வெளியேற்றப்படுகிறது. இந்த வாயு, கடலுக்கு போவது வழக்கம். ஆனால், காற்றின் திசை மாற்றத்தால், சென்னை புறநகர் பகுதியான மணலி, அரிகிருஷ்ணபுரம், எடப்பாளையம், தில்லைபுரம், கலைஞர் நகர், லம்பைமேடு மற்றும் மாத்தூர் எம்.எம்.டி.ஏ., உள்ளிட்ட பல இடங்களில், நேற்று காலை, 10:00 மணிக்கு அமோனியா வாயு
அதிகளவில் பரவியது. இதனால், கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல மணி நேரம் வாயு கசிவு நிலவியதால். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் நடந்து சென்ற
பலரும், துணிகளால் முகத்தை மூடியபடியே சென்றனர்.
கடந்த வாரம் கூட...
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கடந்த வாரம் தான், அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றிய அமோனியா வாயுவால், மூச்சுவிட முடியாமல் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் சிரமப்பட்டனர்.
தற்போதும், அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அம்பத்தூர் ஆர்.டி.ஓ., சண்முகம் கூறியதாவது:
எம்.எப்.எல்., உரத் தொழிற்சாலையில், நேற்று காலை, 9:15 மணிக்கு மின்சாரம் தடைபட்டது. உடனடியாக, ஜெனரேட்டரை இயக்காததால், அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
மாசு கட்டுப்பாட்டு அதிகாரியை வரவழைத்து, ஆய்வு செய்து அறிக்கை தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதியில் சில மணி நேரத்திற்கு பின், இயல்பு நிலை திரும்பியது.
இவ்வாறு அவர் கூறினார்.