ஆதம்பாக்கம் : ஆதம்பாக்கம்
பகுதியில், திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன பெண், தூக்கு போட்டு தற்கொலை
செய்து கொண்டார். மேலும், தீ விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு இருந்த பெண்ணும், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆதம்பாக்கம்,
தில்லைகங்கா நகர் பகுதியை சேர்ந்தவர், சந்தோஷ் குமார்; வெளிநாட்டில்
பணிபுரிகிறார். இவரது மனைவி லட்சுமி, 26. இவர்களுக்கு திருமணமாகி, ஒன்றரை
ஆண்டு ஆகிறது. லட்சுமியின் பெற்றோர், திருவொற்றியூரில் வசிக்கின்றனர்.
லட்சுமி,
பெற்றோருடன் அலைபேசியில் தினமும் பேசுவது வழக்கம். நேற்று முன்தினம்
பேசவில்லை, தொடர்ந்து, அவரது அலைபேசி, அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதை
அடுத்து, அவரது பெற்றோர், லட்சுமியின் வீட்டுக்கு வந்து, கதவை உடைத்து
உள்ளே சென்றனர். அப்போது, லட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்திருந்தார்.
அவர் எழுதியிருந்த கடிதத்தில், "நான் பல நாட்களாக மன அழுத்தத்தில்
இருந்தேன். என்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை' என, தெரிவிக்கப்பட்டு
இருந்தது.
இதுகுறித்து, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரிக்கிறார்.
ஆதம்பாக்கம்,
அம்பேத்கர் நகரை சேர்ந்த செந்தில் மனைவி சியாமளா, 37. இவர், கடந்த, 25ம்
தேதி, மண்ணெண்ணெய் அடுப்பில், சமையல் செய்தார். அப்போது, எதிர்பாராத
விதமாக, சியாமளாவின் சேலையில் தீப்பிடித்து, உடல் முழுவதும் தீ பரவியது.
பலத்த காயங்களுடன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்,
நேற்று இறந்தார்.
இதுகுறித்து, ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.