ஐரோப்பா,
கனடா, ஜப்பான் நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும், நவீன தொழில் நுட்பத்தை
பயன்படுத்தி, வீடு மற்றும் தொழிற்சாலைகளில், மின் கணக்கீடு செய்ய,
தமிழ்நாடு மின்வாரியம் திட்டமிட்டு உள்ளது.
இனி, மின் பயன்பாட்டின்
அளவு, அதற்கான மின் கட்டணம், கட்டணத்தை செலுத்த வேண்டிய கடைசி தேதி போன்ற
விவரங்கள், நுகர்வோரின் மொபைல் போன் மற்றும் இ-மெயில் முகவரிக்கு,
உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்., ஆக வந்து விடும்.
தமிழகத்தில், தற்போது, 2
கோடியே 31 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்புகளின், மின்
பயன்பாட்டு அளவு மாதந்தோறும் பதிவு செய்யப்பட்டு, குறிப்பிட்ட
காலகெடுவுக்குள், நுகர்வோரிடமிருந்து மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதில், பலவிதமான சிக்கல்கள் உள்ளன.
இடியாப்ப சிக்கல்
மின் மீட்டரில்
ஏற்படும் பழுது, பழைய மீட்டர்களுக்கு பதிலாக, புதிய மின் மீட்டர்களை மாற்றி
தராதது, மின் கணக்கீடு செய்ய போதுமான ஆட்கள் இல்லாதது, பல இடங்களில்,
கடந்த மாத மின் கட்டண மே செலுத்த வேண்டிய கட்டாயம், வீடுகளில் மின்
பயன்பாட்டு அளவை குறித்து வைக்கும் அட்டைகள் கூட இல்லாதது என, பல நிர்வாக
பிரச்னைகள் உள்ளன.
மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், மின்
கட்டணத்தை செலுத்த முடியாத நுகர்வோர், பல சிக்கல்களுக்கு ஆளாக
வேண்டியுள்ளது. மேற்கண்ட பிரச்னைகளை தீர்க்க, மின்வாரியம் அதிரடி
நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
வெளிநாட்டு தொழில்நுட்பம்
ஐரோப்பா,
கனடா, ஜப்பான் நாடுகளில், வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை
கணக்கீடு செய்யும் நவீன தொழில் நுட்ப முறையை, தமிழகத்தில் அமல்படுத்த, மின்
வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில், ஏற்கனவே, மும்பையில் இந்த நவீன தொழில் நுட்ப திட்டம் அமல்படுத்தப்பட்டு வெற்றியடைந்து உள்ளது.
இது குறித்து, மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாதந்தோறும்
மின் கணக்கீடு செய்து, மின் கட்டணத்தை வசூல் செய்வதில், ஏராளமான
சிக்கல்கள் உள்ளன. இதை சரி செய்ய, நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு
செய்துள்ளோம்.
அதன் அடிப்படையில், வெளிநாடுகள் மற்றும் மும்பையில்
வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும், புதிய நவீன தொழில் நுட்பத்தை,
தமிழகத்திலும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கையடக்க கருவி
இதன் அடிப்படையில், மின்வாரிய ஊழியர் ஒருவர், தன் கையில் ஒரு கையடக்க கருவியை கொண்டு வருவார். காந்த
புலத்தின்
அடிப்படையில் இயங்கும் அந்த கருவியை, வீடு மற்றும் தொழிற்சாலையின்
வாசல்படி அருகே கொண்டு வந்தவுடன், மின் மீட்டரில் பயன்படுத்தப்பட்ட, மின்
யூனிட்டின் அளவு மற்றும் அதற்கான கட்டணம் போன்ற விவரங்கள், அந்த கருவியில்
உடனுக்குடன் பதிவாகி விடும்.
அப்போதே, சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட
மின்வாரிய அலுவலகத்தில் உள்ள, "டேட்டா என்ட்ரி' கம்ப்யூட்டரிலும் பதிவாகி
விடும். இதையடுத்து, உடனுக்குடன் நுகர்வோரின் மொபைல் போன்
மற்றும், இ-மெயில் முகவரிக்கு, எஸ்.எம்.எஸ்., சென்று விடும்.
அதில்,
அவர் வீட்டில் பயன்படுத்தப்பட்ட, அந்த மாதத்துக்கான மின் யூனிட்டுகளின்
அளவு, அதற்கான கட்டணம், கட்டணத்தை செலுத்த வேண்டிய கடைசி தேதி போன்ற
விவரங்கள், முழுமையாக இருக்கும்.
இதனால், நுகர்வோர் எந்தவித, "டென்ஷனும்' இல்லாமல்,
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், மின் கட்டணத்தை செலுத்தி விடுவர்.
மேலும்,
இந்த வசதி மூலம், மிகக் குறைவான ஆட்களைக் கொண்டே, மின் கணக்கீடு செய்துவிட
முடியும். இந்த திட்டம், விரைவில் வெற்றிகரமாக அமல்படுத்தப்படும் என்று
எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டம் தற்போது,
சென்னை மத்திய மின் பகிர்மான கோட்டத்தில், பரிசோதனை முயற்சியாக, முதலில்
அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சென்னை மத்திய மின்பகிர்மான
கோட்டத்துக்குட்பட்ட, 1.50 லட்சம் மின் இணைப்புகளில் பரிசோதனை
செய்யப்படுகிறது. முதல் கட்டமாக, 500 கோடி ரூபாய் நிதியை, மின்சார வாரியம்
ஒதுக்கி உள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் போது, வீடு மற்றும்
தொழிற்சாலைகளில், புதிய நவீன மின் மீட்டர்கள் பொருத்தப்படும். இனி
பொதுமக்கள், அலைச்சல் இல்லாமல், மின் கட்டணங்களை செலுத்த முடியும்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.