தனியார்
சொகுசு பேருந்துக்கு போட்டியாக, தென் மாநில முக்கிய நகரங்களுக்கு, அதி
நவீன சொகுசு (மல்டி ஆக்சல் வால்வோ) பேருந்துகளை இயக்க, போக்குவரத்து துறை
திட்டமிட்டுள்ளது.
சொகுசு, அதிசொகுசு மற்றும் குளிர்சாதன வசதியுடன்
கூடிய பேருந்து, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய தென்
மாநிலங்களுக்கு, 994க்கும் மேற்பட்ட பேருந்துகளை, அரசு விரைவு போக்குவரத்து
கழகம் இயக்குகிறது.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சை,
நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற நகரங்களில் இருந்து, கேரளா,
ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு, நவீன வசதிகளுடன் கூடிய
பேருந்துகளை, தனியார் நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. இதில் புதுச்சேரியும்
அடங்கும்.
நீண்ட தூர பயணத்திற்கு, நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து பயணத்தை, பொதுமக்கள் விரும்புகின்றனர்.
பேருந்துகளில் பயணிகளுக்கான கூடுதல் வசதியோடு, பாதுகாப்பான
பயணத்தை
உறுதி செய்யும் வகையில், சொகுசு பேருந்து களை தனியார் நிறுவனங்கள்
வடிவமைக்கின்றன. இதுபோன்ற, பேருந்துகள் அரசு போக்குவரத்துத் துறையிடம்
இல்லை.
இதைப்போல, பயணிகளுக்கு கூடுதல் வசதிகளுடன் அரசுப் பேருந்துகள்
இயக்கப்பட்டாலும், தனியார் பேருந்துகளில் உள்ள வசதிகள் மற்றும் சேவை போன்று
இல்லை என்ற எண்ணம், பொதுமக்களிடம் இருந்து வருகிறது. இதை கருத்தில்
கொண்டு, அதி நவீன சொகுசு பேருந்துகளை இயக்க, போக்குவரத்துத் துறை
திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனியார்
நிறுவனங்கள் இயக்கும் பேருந்துகளில், நவீன வசதிகள் உள்ளன. இதற்கு, இணையாக
கழிப்பறை, தட்ப வெப்பக் கட்டுப்பாடு, "டிவி' ஆகிய நவீன வசதிகள் அடங்கிய
பேருந்துகளை இயக்க, திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான பரிந்துரையை, அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன், இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -