திருவேற்காடு : "நகராட்சியில்,
பிறப்பு எண்ணிக்கையை விட, இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' என,
திருவேற்காடு நகராட்சியின் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை
மாநகராட்சிக்கு மிக அருகே உள்ள நகராட்சி பகுதி, திருவேற்காடு. கடந்த, 20
ஆண்டுகளுக்கு முன், வயலும், வயல் சார்ந்த இடமுமாக இருந்த திருவேற்காடு,
ஊராட்சியாக இருந்து, பின், பேரூராட்சியாக உயர்ந்து, இன்று, நகராட்சியாக
வளர்ந்துள்ளது.
தேவி கருமாரியம்மன் கோவில், பாலாம்பிகை உடனுறை
வேதபுரீஸ்வரர் கோவில் ஆகிய இரு கோவில்களையும் கொண்ட திருவேற்காடு நகராட்சி,
சுந்தரசோழபுரம், கோலடி, அயனம்பாக்கம், வேலப்பன்சாவடி, நும்பல் உள்ளிட்ட
பகுதிகளை உள்ளடக்கி, 28.50 சதுர கி.மீ., பரப்பளவில் விரிந்து இருக்கிறது.
பத்தாண்டுகளுக்கு
முன், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட இந்நகராட்சியின்,
இன்றைய மக்கள் தொகை, 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில்,
திருவேற்காடு நகராட்சியில், பிறப்பு எண்ணிக்கையை விட, இறப்பு எண்ணிக்கை
அதிகம் என, நகராட்சியின் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி,
கடந்த, 2012ல், பிறப்பு எண்ணிக்கை, 237, இறப்பு எண்ணிக்கை, 332. கடந்த,
2011ல், பிறப்பு எண்ணிக்கை, 218, இறப்பு எண்ணிக்கை, 310, ஆகும்.