அலங்காநல்லூர் : அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டில் 200 காளைகள் பதிவு செய்ய பிராணிகள் நல வாரியம் மறுப்பு
தெரிவித்ததால், காளையின் உரிமையாளர்கள் மேல் நடவடிக்கைக்கு முயற்சித்து
வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், தகுதியான உடல்
அமைப்பு, வயது முதிர்வு உட்பட அங்க அடையாளங்களை கால்நடைத்துறையினர் ஆய்வு
செய்து, சான்று தரவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இச்சான்று
இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டில் காளைகள் களமிறக்கப்படும்.
கடந்தாண்டில்
இந்த நடைமுறை தெரியாத காளையின் உரிமையாளர்கள், ஏமாற்றுத்துடன் திரும்பி
சென்றனர். இதற்கிடையே, காளையின் உரிமையாளர்கள் பிராணிகள் நல வாரியத்திற்கு
பதிவு தபாலில் உரிய ஆவணங்களை அனுப்பி
வைத்தனர்.
ஒரு ஆண்டுக்கு பின், நேற்று
(ஜன.,9)
அனைத்து பதிவுகளையும் பிராணிகள் நல வாரியத்தினர் திருப்பி அனுப்பியுள்ளது.
இது காளை உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அ.வெள்ளாலபட்டி
மலைச்சாமி: பத்து ஆண்டுக்கு மேலாக ஜல்லிக்கட்டில் காளைகளை களமிறக்குகிறேன்.
பிராணிகள் நல வாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தேன். அனுமதிக்காக ரூ.10
ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளேன். நடப்பு ஆண்டில் ஜல்லிக்கட்டில்
பங்கேற்க அனுமதி மறுக்கப்பபட்டது வேதனையளிக்கிறது.
சாம்பிராணிபட்டி
பெரியவர்: ஜல்லிக்கட்டில் விளையாட அனுமதி கிடைக்காதது மன உளைச்சலை
உண்டாக்கியுள்ளது. பதிவு செய்யப்படாததற்கு காரணம் கேட்டு, வாரியத்திற்கு
விளக்கம் கேட்க உள்ளோம்.
விழாக்குழு பொறுப்பாளர் பாலாஜி: கடந்தாண்டில்
ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாக காளையின் உரிமையாளர்கள்
கேண்டுகோளுக்கிணங்க, முறையாக பதிவு செய்யப்பட்ட 200 காளைகள் பட்டியல்
பிராணிகள் நல வாரியம் சென்னைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் எந்த மனுவும்
ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.
பாலமேடு விழாக்குழு செயலாளர்
சத்தியமூர்த்தி: கடந்தாண்டு 400 காளைகள் களமிறக்கப்பட்டது. 200க்கும்
மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்படவில்லை. காளையின் உரிமையாளர்களின்
ஒத்துழைப்போடு, கிராம கமிட்டி சார்பில், பதிய சென்னை பிராணிகள் நல வாரிய
அலுவலகத்திற்கு அனுப்பினோம். அனுமதி கிடைத்துள்ளது, என்றார்.