மதுரை : மதுரை மாநகராட்சியில், மக்கள் நலனுக்கு கொண்டு வரப்பட்ட, "இ பிளானிங்'
திட்டத்திற்கு, அ.தி.மு.க., மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விரக்தியில் சிலர், அதிகாரிகளின் முறைகேடுகளை போட்டு உடைத்தனர்.மேயர் ராஜன் செல்லப்பா, கமிஷனர் நந்தகோபால் தலைமையில் நடந்த கூட்டத்தின் விவாதம்:
சாலைமுத்து, மண்டலம் 4ன் தலைவர்: குடிநீர் பற்றாக்குறை அபாயம் உள்ளது. ரயில்வே ஸ்டேஷனில் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை.
நகர் பொறியாளர் மதுரம்: ஜூலை வரை, குடிநீர் தேவையில் பிரச்னை இல்லை.
சாலைமுத்து: மேலூர் குடிநீர் திட்டத்தை நம்ப முடியாது; புறநகர் பகுதிகளுக்கு "போர்வெல்' அமைப்பதில் என்ன பிரச்னை?மதுரம்: புறநகர் பகுதிகளுக்கு தற்காலிக குடிநீர் வசதிக்கு, ரூ.7 கோடியில் திட்டங்கள் தயார் செய்துள்ளோம். சாலைமுத்து:
"இ பிளானிங்' திட்டம், அரசு உத்தரவுக்கு எதிராக செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்தாட்சியில், கவுன்சிலராக இருந்து கூச்சலிட்டோமே தவிர, எதுவும்
சம்பாதிக்கவில்லை. எங்கள் வருமானத்திற்கு நீங்கள் எந்த வழியும் செய்ய
வேண்டாம்; நீங்களே அனைத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்!(அனைத்து
கவுன்சிலர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்)
மேயர்: அவர் எதைக்கூறுகிறார் என்பது தெரியாமல், கவுன்சிலர்கள் வரவேற்கக் கூடாது.
சாலைமுத்து: மேயருக்கு பிடிக்கவில்லை என்றால், என் பதவியை பறித்துக்கொள்ளட்டும்.
மேயர்: மண்டலத் தலைவர் பதவியை பறிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை.
சாலைமுத்து:
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பல முறைகேடு நடந்துள்ளது. வெள்ளைச்
சட்டையை அணிந்திருக்கிறோம்; அதில் கறைபடும் போது, அதை கழற்றி வைப்பதை தவிர
வேறு வழியில்லை.
செல்லம், மார்க்சிஸ்ட்: "எக்@கா' பூங்காவின் தியான
மண்டலம் பழுதானது குறித்து, கமிஷனரிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை
இல்லை.
கோபாலகிருஷ்ணன், துணை மேயர்: "இ பிளானிங்' திட்டம், கோவையில்
செயல்பாட்டில் உள்ளது. மக்கள் பிரதிநிதிகள், மக்களிடம் முறையாக விளக்காமல்,
திட்டத்தை மதுரையில் செயல்படுத்தியிருந்தால், நன்றாக இருந்திருக்கும்.
திரவியம்:
"இ பிளானிங்' திட்டம் மீது அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். அதை
மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதை விளக்க வேண்டும்.(கவுன்சிலர்கள் பலரும்,
"இ பிளானிங்' திட்டத்திற்கு எதிராக கூச்சலிட்டனர்)
ராக்கப்பன், நகரமைப்பு அலுவலர்: இது அரசின் "பாலிசி' திட்டம்.
மேயர்:
இத்திட்டம் குறித்து கவுன்சிலர்களுக்கு விளக்கும் கூட்டம் ஏற்பாடு
செய்யப்படும். அதுவரை யாரும், அத்திட்டம் குறித்து விமர்சிக்க வேண்டாம்.
கண்ணகி, வேலைக்குழுத்
தலைவர்:
அனுப்பானடி கால்வாயை தூர்வார, பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
வார்டில் பழுதாகும் மோட்டார்களே, நாங்களே பழுது பார்க்கிறோம். சிறப்பு
நிதியை, உதவிப் பொறியாளர்கள் பயன்படுத்துவதே இல்லை.
சுகந்தி, கல்விக்குழுத் தலைவர்: பள்ளிக்கு ஆய்வு வரும் கமிஷனர், எங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை.
மேயர்:
மேயர், துணை மேயர் வந்தால் தகவல் தெரிவிக்கலாம். திடீர் ஆய்வுக்கு வரும்
கமிஷனர் குறித்து, தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
தாஸ்:
தத்தனேரி மயானத்தில் உள்ள பணியாளர்கள், சிறுவர்களை வைத்து வேலை
வாங்குகின்றனர். வருவோரிடம் கூடுதலாக வசூலிக்கின்றனர். மின் மயானம்
செயல்பாடின்றி உள்ளது.
கமிஷனர்: மயான பணியாளர்கள் குறித்து
விசாரிக்கப்படும். மின்மயானம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இவ்வாறு தொடர்ந்து விவாதம் நடந்தது.
அதிகாரியை கண்டுபிடிக்க உத்தரவு
* அ.தி.மு.க., கவுன்சிலர் விஜயராஜா, தன் உதவியாளர்களுடன் இல்ல நிகழ்ச்சிக்கான பத்திரிகையை கவுன்சிலர்களிடம் சபையில் வழங்கினார்.
*
தாமதமாக தொடங்கிய கூட்டத்தில் ஆரம்பத்திலேயே, ""அனைவரும் சுருக்கமாக
பேசி, அனைவருக்கும் வாய்ப்பளிக்குமாறு,'' மேயர் கோரிக்கை வைத்தார்.
*
மாநகராட்சியில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின், முதன் முதலாக வடை,
கேக் கொண்டு வரும் நேரம் வரை, தி.மு.க., கவுன்சிலர்கள் சபையில் இருந்தனர்.
*
வழக்கத்திற்கு மாறாக, மண்டலம் 3ன் தலைவர் ராஜபாண்டி, மேயரை புகழ்ந்து
தள்ளினார். மேயர் முதற்கொண்டு யாருமே அதை எதிர்பார்க்கவில்லை.
*
தத்தனேரி மயானம் தொடர்பான பதிலளிக்க அதிகாரியை அழைத்த போது, யார் அதற்குரிய
அதிகாரி என்பது, கடைசி வரை தெரியவில்லை. அதிகாரியை கண்டுபிடிக்க கமிஷனர்
உத்தரவிட்டார்.