மதுரை : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பேசுவதற்காக தாமதமாக வந்த தி.மு.க.,வினருக்கு, இம்முறையும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மண்டலத்தலைவரின் மிரட்டலை எதிர்த்த அவர்கள், வெளியேற்றப்பட்டனர்.அ.தி.மு.க., நிர்வாகம் பொறுப்பேற்ற நாளிலிருந்து, முதலில் பேச வாய்ப்பு கேட்டு, தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வது, தொடர்ந்து நடந்தது. "எங்கள் நடைமுறை மாற்ற முடியாது; மண்டலத் தலைவர்கள் பேசிய பின், சபைக்கு வந்து நீங்கள் பேசலாம்,' என, மேயர் ராஜன்செல்லப்பா கொடுத்த "ஐடியா'வை, தி.மு.க.,வினர் நேற்று நடைமுறைப்படுத்தினர்.கருப்புச் சட்டையுடன் தாமதமாக வந்த அவர்கள், வெளிநடப்பு செய்த மண்டலம் 1ன் தலைவர் ராஜபாண்டியின் பேச்சை ரசித்து கேட்டனர். பின், மண்டலம் 3ன் தலைவர் ராஜபாண்டியன் பேச எழுந்த போது, தங்களுக்கு வாய்ப்பு தருமாறு கேட்டு கூச்சலிட்டனர்.
பின், நடந்த விவாதம்:
ராஜபாண்டியன்: சபைக்கென்று மரபு உள்ளது; மேஜையில் உட்கார்ந்து அடாவடி செய்யக் கூடாது. உங்களுக்குத் தான் ரவுடித்தனம் செய்யத் தெரியுமா? உங்களை விட எங்களுக்குத் தெரியும்.
மேயர்: நீங்கள் எதற்காக, கருப்புச் சட்டை அணிந்து உள்ளீர்கள்? (தி.மு.க., வினர் தொடர்ந்து கூச்சலிட்டனர்)
ராஜன், அ.தி.மு.க.,: சோகம் நிலவும் அறிவாலயத்திற்கு, கருப்புச் சட்டையுடன் செல்லுங்கள்.
எம்.எல்.ராஜ், தி.மு.க.,: மேயரும் தான், கருப்பு அங்கி அணிந்திருக்கிறார்... அவருக்கு என்ன சோகமாம்? (அ.தி.மு.க.,வினர் கூச்சலிட்டனர்)
மேயர்: தி.மு.க.,வினர் துக்கத்தில் இருப்பதாக நாம் நினைத்துக் கொள்வோம். (தி.மு.க.,வினர் அனைவரும் கூச்சலிட்டனர்)
மேயர்: முதல்வர் ஜெ., கூறியபடி, தி.மு.க., வின் கதை முடிந்து போய்விட்டது.
ராஜபாண்டி: இதற்கு தான், இந்த ரவுடிகளை அப்போதே வெளியேற்றச் சொன்னேன்(தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்)
மேயர்: நீங்கள் அமைதியாக இருந்தால், அவரது பேச்சை நான் கட்டுப்படுத்துவேன். (ராஜபாண்டியை கைநீட்டி தி.மு.க.,வினர் பேசினர்)
ராஜபாண்டியன்: ஏய்... கை நீட்டி பேசாத; உனக்கு கை இருக்காது,
ரவுடி ....யே என்றார்.
மண்டலத்தலைவரின் மிரட்டலுக்கு தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூச்சல் தொடர்ந்ததால், மேயர்
உத்தரவுப்படி, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனால், இம்முறையும் தி.மு.க.,வினரால் பேச முடியவில்லை. அதன் பின் பேசிய ராஜபாண்டியன்,
"ரவுடி' என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு மேயரிடம் மன்னிப்பு கேட்டார்.