தி. நகர் பேருந்து நிலையம் மற்றும் பணிமனையை, 67 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வளாகமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை, மாநகர போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்க, உயரதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் முக்கிய வணிக மையமான
தி.நகரில், நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இங்குள்ள பேருந்து நிலையத்துக்கு தினசரி, 250க்கும் மேற்பட்ட வழித்தட பேருந்துகள், 10 முறைக்கு மேல் வந்து செல்கின்றன.மேலும், இந்த பணிமனையில் இரவு நேரத்தில், 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இடப் பற்றாக்குறையால், பல பேருந்துகள் பணிமனைக்கு வெளியில் நிறுத்தப்படுகின்றன.
மறுகட்டமைப்பு திட்டத்தில்...பெருகிவரும் தேவைக்கு ஏற்ப இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, "தி.நகர் மறு கட்டமைப்பு திட்டம்',
"டுபிசெல்' மூலம், சில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைக்கப்பட்டது.முதலில் சி.எம்.டி.ஏ., மூலம் செயல்படுத்தப்படுவதாக இருந்த இந்த திட்டம், தற்போது மாநகராட்சி வசம் சென்றுள்ளது. பயனாளிகள் என்ற அடிப்படையில், பொது மக்களின் கருத்துகளை கேட்கும் நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு, வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தி.நகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கடந்த நவம்பரில் இறுதி செய்யப்பட்ட, தி.நகர் மறுகட்டமைப்புக்கான வரைவு திட்ட அறிக்கையில் இந்த திட்டம் சேர்க்கப்படவில்லை.ஆய்வுக்கூட்டம்இந்நிலையில், தி.நகர் பேருந்து நிலைய மேம்பாட்டு திட்டம் குறித்த உயர் நிலை ஆய்வு கூட்டம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் தலைமையில் சமீபத்தில் நடந்தது.
மாநகராட்சியின் பணிகளுக்கான கூடுதல் கமிஷனர், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், நிதித்துறை இணை இயக்குனர், "டுபிசெல்' நிர்வாகிகள் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்ற உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தி.நகர் பேருந்து நிலைய மேம்பாட்டுக்காக, எஸ்.ஆர்.இ.ஐ., உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் தயாரித்த, நான்கு வித கருத்துருக்கள் குறித்து இக்கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.இதில், 67 கோடி ரூபாய், 123 கோடி ரூபாய் ஆகிய மதிப்புகளில் விவரிக்கப்பட்ட இரு பரிந்துரைகளை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.ஆனால், வரைவு பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளபடி அடித்தளத்தை பேருந்து பணிமனையாக பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என, மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
எனவே, அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம் தரை தளத்தில் பேருந்து நிலையம்
முதல் தளத்தில் பேருந்து பணிமனை இரண்டு, மூன்று ஆகிய தளங்களில் வணிக நிறுவனங்கள் அமைப்பது என, முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.வரைவு அறிக்கை தயாரிக்க...மேலும் அவர் கூறியதாவது:போக்குவரத்து, நகர்ப்புற வளர்ச்சி, உள்ளாட்சி என, அரசின் பல்வேறு துறைகள் மூலம் இதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் திரட்டப்படும். இதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு, மாநகர போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் நிறைவேற்றப்படும் வரை தற்காலிக ஏற்பாடாக, தி.நகர் பேருந்து நிலையம், பணிமனை செயல்பட மாற்று இடத்தை தேர்வு செய்யவும், மாநகர போக்குவரத்து கழகம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.மாநகர போக்குவரத்து கழகம் ஒரு அரசு நிறுவனம் என்பதையும், நகரின் மையப்பகுதியில் நெரிசலை குறைக்கும் திட்டம் என்பதையும் கருத்தில் கொண்டு, இதற்கான திட்ட அனுமதி வழங்கும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -