தண்ணீர் இல்லாமல் வாடும் தென்னை மரங்கள் :திருப்பூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க...வலியுறுத்தல்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜன
2013
06:08

திருப்பூர்:"மழையில்லாமல் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. எனவே, திருப்பூரை வறட்சி மாவட்டமாக அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்,' என, விவசாயிகள் வலியுறுத்தினர்.விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் ஷெரீப், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகளை அதிகாரிகள் விளக்கினர். அதன்பின், விவசாயிகள் பேசினர்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன்: ஆண்டு தோறும் 135 நாட்கள் பி.ஏ.பி., தண்ணீர் விட வேண்டும். ஆண்டுக்கு இரண்டு மண்டலங்களுக்கு மட்டுமின்றி, நான்கு மண்டலங்களுக்கும், தலா இரண்டு சுற்று தண்ணீர் விட வேண்டும்.உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி: மழையும் பெய்யவில்லை; அமராவதி ஆற்றிலும் தண்ணீர் இல்லை. இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தாண்டு நெல் சாகுபடி நடக்கவில்லை. அதனால், நிலவரி செலுத்த வேண்டும் என்ற நிர்பந்தத்தை தளர்த்த வேண்டும்; வரியை தள்ளுபடி செய்ய வேண்டும்.கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி: நிலத்தடி நீரை காப்பாற்றும் வகையில், பி.ஏ.பி., வாய்க்காலில் வரும் தண்ணீரை, ஆங்காங்கே உள்ள குளம், குட்டைகளில் நிரப்ப அனுமதிக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு போதுமான தீவனம் கிடைக்காததால், வெளியே வாங்கி, குறைந்த விலையில் மாட்டுத்தீவனம் வழங்க வேண்டும்.தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி: கீழ்பவானி பாசனத்தில், 2.70 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 20ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கடை மடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில், கீழ்பவானி தண்ணீரை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வல்லகுண்டாபுரம் விவசாயி சிங்காரம்: கால்நடைகளை "உனி காய்ச்சல்' என்ற நோய் தாக்குவது அதிகரித்து வருகிறது. அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படுவதால், உனி காய்ச்சல் பாதிப்பு :ஏற்படும் சினை மாடுகள் சீக்கிரமாக இறந்து விடுகின்றன. எனவே, மாவட்டம் முழுவதும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
கொப்பரை விவசாயிகள் சங்க தலைவர் மயில்சாமி: பி.ஏ.பி., பாசன கால்வாய் 78 கிலோ மீட்டர் தூரத்துக்கு 50 அடி அகலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது, சூரிய ஒளி மின்கலங்களை நிறுவும்போது, பாசன நீர் ஆவியாவது குறையும். சூரிய ஒளி மின்சாரத்தையும் உற்பத்தி செய்யலாம்.மங்கலம் பி.ஏ.பி., பாசன சபை முன்னாள் தலைவர் பொன்னுசாமி: ஆண்டிபாளையம் குளத்தில் படகுகள் இயக்கப்பட்ட பிறகும், சிறுவர் பூங்கா, நடைபாதை என எவ்வித வசதிகளும் மேம்படுத்தப்பட வில்லை. தண்ணீர் வற்றியதில் இருந்தே, பொதுமக்களும் படகு சவாரிக்கு வருவதில்லை. நகரை ஒட்டியுள்ள குளத்தை பொழுதுபோக்கு தளமாக மாற்ற வேண்டும்.ஊத்துக்குளி விவசாயி முத்துசாமி: திருப்பூர் சாய ஆலைகளில் இருந்து வெளியான கழிவுநீரால், ஒட்டுமொத்த விவசாயமும் பறிபோய் விட்டது. தற்போது சாயக்கழிவு நீர் வெளியேறுவது அதிகரித்துள்ளது. கழிவுநீரை பருகும் கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படுகிறது. நொய்யல் ஆற்றோரம் உள்ள சாய ஆலைகளை மூட வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மோகன்: முறைகேடாக இயங்கும் சாயப்பட்டறைகளை கண்டுபிடித்தால், "சீல்'வைப்பதுடன், மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கையை நிறுத்திக்கொள்கிறது. எந்த நிறுவனத்தின் மீதும் கிரிமினல் நடவடிக்கை தொடர்வதில்லை. முறைகேடான சாய ஆலைகள் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்.விவசாயி முருகானந்தம்: நீர்வள நிலவள திட்டத்தில், உப்பாறு பகுதி விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனத்திற்கான மானியம் வழங்குவதில்லை. ஊராட்சி பகுதியில் காய்ந்துள்ள குளம், குட்டைகளில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் மதுசூதனன்: திருப்பூர் மாவட்டத்தில் 90 சதவீத விவசாயிகள், மழையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். முதல்கட்டமாக, சோளப்பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.கண்டியன்கோவில் விவசாயி கதிரேசன்: அலகுமலை பகுதியில் கால்நடை கிளை மருத்துவமனைகள் இல்லை. இதனால், நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கண்டியன்கோவில் கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.
காலை 8.00 மணிக்குள் சினை ஊசி போட வேண்டியிருப்பதால் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அலகுமலையில் கால்நடை கிளை மருத்துவமனை துவக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.விவசாயிகளுக்கு அழைப்புஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சம்பத் பேசியதாவது:விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வேலை உறுதி திட்டத்தில் நிலங்களை மேம்படுத்திக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிறு, குறு விவசாய நிலங்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விளைநிலங்களும் இத்திட்டத்தில் மேம்படுத்தப்படும்.அதற்காக, பதிவு செய்துள்ள சிறு, குறு விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் வரும் 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா கிராமசபா கூட்டத்தில், ஒப்புதல் பெறப்பட்டு. சிறு, குறு விளைநிலங்கள் மேம்பாட்டு பணி துவக்கப்படும், என்றார்.
ரூ.162 கோடி கடன் வழங்கல்கலெக்டர் பேசியதாவது:விவசாயிகள், உழவர் சந்தைக்கு பயன்படுத்தும் நேரம் தவிர, மற்ற நேரங்களில், மினி பஸ்களில் இருக்கைகளை அப்புறப்படுத்தி ஓட்டக்கூடாது. மேலும், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் பகுதிகளில், கொத்தவரை சாகுபடி செய்து, அதன் விதையில் இருந்து பசை தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதை அறிந்துகொள்ளும் வகையில், வேளாண் விற்பனை குழு சார்பில், விவசாயிகளுக்கு கண்டுணர் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.பயிர்க்கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த புகார் தொடர்பாக, ஆய்வு நடத்தப்பட்டது.
2012 ஏப்., முதல் மார்ச் வரை, கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 162 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன்களுக்கு, நான்கு சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும். மாறாக, சில வங்கிகள் ஏழு சதவீதம் வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, ஏழு சதவீதம் வசூலிக்கப்படும்; முறையாக தவணை செலுத்தும்போது, மூன்று சதவீத வட்டி திரும்ப வழங்கப்படும். இதுகுறித்து விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.