சென்னை:முன்னாள் நண்பரின் வீட்டுக்கு பூட்டு போட்ட, தி.மு.க., பகுதி செயலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.சென்னை வேளச்சேரி யோகநரசிம்மர் கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவரும், தி.மு.க., பிரமுகருமான இளங்கோவன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த புகார் மனு:நானும் வேளச்சேரி தி.மு.க., பகுதி செயலர் ரவியும் கூட்டாக சேர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தோம். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சமரசமாக பிரிய முடிவெடுத்@தாம். இதையடுத்து எனக்கு தரவேண்டிய 80 லட்ச ரூபாய்க்கு பதிலாக தரமணியில் உள்ள 50 லட்சம் மதிப்புள்ள வீட்டை எனக்கு பதிவு செய்து கொடுத்தார்.
இந்நிலையில், வக்கீல் உள்ளிட்ட இருவருக்கு பணம் கொடுக்க வேண்டும். அவர் என் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டார். எனக்கு உதவி செய் என ரவி கேட்டார். பழைய நட்பு அடிப்படையில் 27 லட்ச ரூபாய் பணம் கொடுத்தேன். பணத்தை ஆறு மாதத்தில் திருப்பி தருவதாக கூறினார். ஆனால், சொன்னபடி நடக்கவில்லை.கடந்த 7ம் தேதி, ரவியை பார்க்க வேளச்சேரிக்கு சென்றேன். பணம் கேட்டு வந்தால் பிணமாக தான் போகவேண்டும் எனக்கூறி கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து அங்கிருந்த எத்திராஜ் என்பவர், சமாதானமாக போவோம். போலீசில் புகார் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டதன் பேரில், வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, ரவியின் அடியாட்கள் என்னை மொபைல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். மீண்டும் தொடர்பு கொண்டு இரண்டு நாட்களுக்கு உன்னை காலி பண்ணிடுவோம். தரமணி வீட்டை ரவி பூட்டச்சொல்லிவிட்டார் எனக் கூறினர். இதையடுத்து இரவு 10:00 மணிக்கு அங்கு சென்று பார்த்தபோது, வீடு பூட்டிக்கிடந்தது. எனவே, எனக்கு விற்ற வீட்டையும், எனக்கு சேர வேண்டிய பணத்தையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.