திருப்பூர்:"திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க, 8.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை கிடைத்ததும், ஓரிரு வாரங்களில் பணம் பட்டுவாடா செய்யப்படும்,' என, கோவை ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) இல்லாததால், கோவை மற்றும் ஈரோடு மாவட்ட ஆவின் நிர்வாகம் கட்டுப்பாட்டில், திருப்பூர் மாவட்டம் உள்ளது.
அவிநாசி, திருப்பூர், பொங்கலூர், பல்லடம், குடிமங்கலம், உடுமலை ஒன்றிய பகுதிகள், கோவை ஆவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மொத்தம் 212 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. அவற்றில், ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர்.ஆவின் நிறுவனம் வழக்கத்தைவிட, அதிக லாபம் ஈட்டும்போது, கூடுதல் லாபத்தொகையை பிரித்து, உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த 2010 முதல், கோவை ஆவின் லாபத்தில் இயங்குவதால், பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கல் பண்டிகை சமயத்தில்,ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், "உற்பத்தியாளர்கள் ஆண்டு முழுவதும் வழங்கியுள்ள பால் எடையை ஆய்வு செய்து, லிட்டருக்கு 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். லிட்டர் 20 ரூபாய்க்கு விற்கும் பாலுக்கு, மீண்டும் ஊக்கத்தொகை வழங்குவது பால் உற்பத்தியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வழக்கமாக, பொங்கல் பண்டிகையின்போது வழங்க வேண்டிய ஊக்கத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஊக்கத்தொகை வழங்கினால், ஒரு மாடு வைத்திருப்போருக்கு 3,000 முதல் 3,500 ரூபாய் வரை கிடைக்கும்,' என்றனர்.
கோவை ஆவின் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்ட போது, "திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் உறுப்பினர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்குவதற்காக, 8.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள் ளது. அதற்குரிய அரசாணை நகல் கிடைத்ததும், ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்படும். அதிகபட்சம் ஓரிரு வாரங்களில் பட்டுவாடா துவங்கும்,' என்றனர்.