கோவை:மீன் மார்க்கெட்டில், வேறு பொருட்களை விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தும், உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் மவுனம் சாதித்து வருகிறது.கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான நவீன மீன் மார்க்கெட், உக்கடம்-பேரூர் பை-பாஸ் ரோட்டில் உள்ளது. மொத்தமுள்ள 68 கடைகளில், 48 கடைகள் மீன் விற்பனைக்கும், தலா 10 கடைகள் ஆட்டிறைச்சி மற்றும் கருவாடு விற்பதற்காகவும் ஒதுக்கப்பட்டன. இந்த கடைகளில் வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது என்பது மாநகராட்சியின் ஏல நிபந்தனைகளில் முக்கியமானது.ஆனால், கடையை ஏலம் எடுத்தவர்களில் பலர், தங்கள் இஷ்டம் போல் கடைகளை நடத்த ஆரம்பித்தனர். கடை எண் 21ல் ஓட்டல் நடத்தப்பட்டது.
இதுபற்றி புகார் சென்றதும், அப்போதிருந்த கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, அந்த கடையை "சீல்' வைக்க நடவடிக்கை எடுத்தார். மற்ற கடைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர் மாற்றப்பட்ட பின், மீண்டும் புதுப்புது வியாபாரங்கள் தலையெடுத்தன.இங்குள்ள 6 கடைகளில், கோழி, சேவல், காடை, புறா, கிளி, லவ்பேர்ட்ஸ் என பல விதமான பறவைகளும், சில கடைகளில் பறவைக் கூண்டுகளும் விற்கப்படுகின்றன. இது மாநகராட்சி ஏல நிபந்தனைகளை அப்பட்டமாக மீறுவது என்று தெரிந்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு விற்பனை செய்ய அனுமதி தரப்பட்டுள்ளதா என்று இங்குள்ள கடைக்காரர்கள் சிலர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் சில தகவல்களைக் கோரினர்.
அதற்கு பதிலளித்த மாநகராட்சி நிர்வாகம், "நவீன மீன் அங்காடி வளாகத்தில் மீன், ஆடு மற்றும் கருவாடு ஆகியவை மட்டுமே விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது; வேறு கடைகள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது; தவறும்பட்சத்தில், அந்த கடைகளை பூட்டி "சீல்' வைத்து, மாநகராட்சியால் பொறுப்பேற்கப்படும்' என்று தெளிவாகக் கூறியிருந்தது. கிளி மற்றும் பறவைகள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று மற்றொரு மனுவுக்கும் பதில் தரப்பட்டது.
ஏல நிபந்தனைகளில் மாற்றமில்லை என்பதை தெளிவுபடுத்திய மாநகராட்சி நிர்வாகம், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகள் பலரும், மாநகராட்சி கமிஷனராக இருந்த பொன்னுச்சாமியை நேரில் சந்தித்தும் நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை வலியுறுத்தினர்; அதற்கும் பலன் இல்லை. மாநகராட்சி நிபந்தனைகளை மீறி வைக்கப்பட்டுள்ள கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அபு என்பவர் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி தனபாலன், "மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து, ஆறு வாரங்களுக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்' என்று கோவை மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவு, கடந்த அக். 17ல் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நவ., இறுதிக்குள் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், பெயரளவுக்கு நோட்டீஸ் கொடுத்து விட்டு, தனது கடமையை முடித்துக்கொண்டது.
இந்த உத்தரவு வந்த பின்பே, இதே மார்க்கெட்டில் 37ம் எண் கடையில் கோழிக்கடையும் திறக்கப்பட்டுள்ளது; கால அவகாசம் முடிந்தும் நடவடிக்கை எடுக்காதது, உத்தரவை மீறி கோழிக்கடை நடத்த அனுமதிப்பது என பல விஷயங்களைச் சுட்டிக்காட்டி, கமிஷனர் பொன்னுச்சாமியிடம் மீண்டும் மனு தரப்பட்டது. இறுதி வரை எந்த நடவடிக்கையுமே எடுக்காமலே, இங்கிருந்து அவர் மாற்றப்பட்டு விட்டார். இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
வீதி எங்கும் விதிமீறல்...!உக்கடம் பழ மார்க்கெட்டில், பழக்கடைக்காக ஒதுக்கப்பட்ட கடைகளில் சுவர்களையே இடித்து, டீக்கடை நடத்தப்படுகிறது. பாஸ்போர்ட் அலுவலகம் அமைந்துள்ள வளாகம், காந்திபுரத்திலுள்ள பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகங்கள் உட்பட மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளா கங்கள் அனைத்திலும் இந்த விதி மீறல், அதிகாரிகளின் ஆசியுடன் தொடர்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.