பேரையூர்:
பேரையூர் தாலுகாவில், மேய்ச்சல் நிலங்கள் அடியோடு குறைந்ததாலும்,
மழையின்றி ஏரி, குளங்கள் வறண்டதாலும் ஆடு வளர்க்கும் தொழில் செய்யும்
குடும்பங்கள், பிழைப்புத் தேடி வெளியூர்களுக்கு செல்கின்றன.இத்தாலுகாவில்,
பேரையூர், டி.கிருஷ்ணாபுரம், எம்.சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள்
வளர்ப்பில் 700 குடும்பங்கள் இருந்தன. இவர்கள், ராமநாதபுரம் மாவட்டம்,
கடலாடி உட்பட பல பகுதிகளில் இருந்து, 20 ஆண்டுகளுக்குமுன் பிழைப்பு தேடி
பேரையூர் தாலுகாவில் குடியேறினர். பல்வேறு ஊர்களில் அதிக எண்ணிக்கையில்
ஆடுகள் வைத்திருப்பவர்களிடம், கடன் பேரில் ஆடுகளை பெற்று, அதை வளர்த்து,
ஆட்டு குட்டிகள் ஈணுவது மூலம், கடனை திருப்பி செலுத்துவார்கள். மேலும்,
கடன் தொகையை செலுத்தியவுடன், மீதமுள்ள ஆடுகளின் எண்ணிக்கையில், சரிபாதியை
அந்த உரிமையாளர்களிடம் திருப்பி கொடுத்து விடுவது இவர்களின் வாழ்க்கை முறை.
இந்தாண்டு, பேரையூர் தாலுகாவில் கடும் வறட்சியால், குடிப்பதற்குகூட
தண்ணீறின்றி ஏரிகள், குளங்கள் வறண்டன. தண்ணீரை விலைக்கு வாங்கி, ஆடுகளுக்கு
கொடுக்கும் சூழல் ஏற்பட்டது. மேலும், மேய்ச்சல் நிலங்கள் 90 சதவீதம்
மறைந்துவிட்டன.
இதனால், ஆடுகள் வளர்க்க முடியாத நிலை. "இனியும்
இங்கிருந்தால் பிழைப்பு நடத்த முடியாது,' எனக் கருதி, 200க்கும் மேற்பட்ட
ஆடு வளர்க்கும் குடும்பங்கள், இத்தாலுகாவை விட்டு வெளியேறி
விட்டனர்.இருளப்பன்: ஆடு மேய்க்கும் தொழில் தவிர வேறு தெரியாது. ஆடுகள்
மேய்ப்பதற்கு, மேய்ச்சல் நிலங்கள் இப்போது இல்லை. மழை இல்லாததால் தண்ணீரும்
இல்லை. ஆட்டு "கிடை'கள் (விவசாய தோட்டங்களில் இரவில் ஆடுகளை அடைத்து, அவை
இடும் புழுக்கைகள் விவசாயத்திற்கு பயன்படும்) அமைக்கவும், விவசாயிகள்
அழைப்பதில்லை. இதனால், குடும்பம் நடத்துவதற்கே கஷ்டமாக உள்ளது.
வேறுவழியின்றி, கேரளா விவசாயிகளுக்கு, ஆட்டுப் புழுக்கைகளை மூடை ரூ.50க்கு
விற்கிறோம்.
விஜயராஜ்: வீடுகள், கட்டடங்கள் கட்டப்பட்டதால் ஆடுகள்
மேய்ப்பதற்கு நிலங்கள் இல்லாமல் போனது. ஓலையால் "குடில்'கள் அமைத்து தான்
தங்குவோம். இதற்கு இடவாடகை கூட கொடுக்க முடியவில்லை.
ராக்கு:
குடும்பத்துடன் பிழைப்பு தேடி பேரையூருக்கு வந்தோம். ரூ.4 லட்சம் பேசி, 100
ஆடுகள் கொண்டு வந்தோம். இதுவரை ரூ.மூன்றரை லட்சம் கடனை செலுத்தி விட்டோம்.
30 ஆடுகள் நோயால் இறந்து விட்டன. இச்சூழலில், மீத கடனை எப்படி திருப்பிச்
செலுத்துவது என்று தெரியவில்லை. ஆடுகள் மேய்ப்பதற்கு ஏற்ற வேறு இடத்துக்கு
செல்ல முடிவு செய்துள்ளோம்.