சென்னை:அடையாறு மற்றும் கூவம் துணை வடிநில திட்டங்களில், வருவாய் துறையின் ஒத்துழைப்பு இல்லாததால், ஏரிகளை பராமரிக்க, ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்கம் அமைக்க முடியாமல், பொதுப்பணி துறை அதிகாரிகள், திணறி வருகின்றனர். ஏரி சீரமைப்பு பணிகள் நிறைவு பெறுவதற்குள், வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழைக் காலத்தில், ஏரிகள் நிரம்பும்போது, கரை உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி, அருகே இருக்கும் விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் நாசப்படுத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.இதை தவிர்ப்பதற்காக, அரசு துறைகளுடன் இணைந்து, உலக வங்கி நிதி உதவியுடன், தமிழகம் முழுவதும், 64 வடிநில பகுதிகளில் அடங்கிய ஏரிகளை, 2,500 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
தண்ணீரை தேக்க...பாலாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட குன்றத்தூர், பரங்கிமலை, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் அடங்கிய, 41 ஏரிகளை, 8 கோடியே, 76 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள், பல கட்டங்களாக நடந்து வருகின்றன.ஒவ்வொரு ஏரியிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதிக அளவு தண்ணீரை தேக்குவது; போக்கு கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது; கரை, கலங்கல் மற்றும் மதகு பகுதிகளை பலப்படுத்துவதே இதன் நோக்கம்.மேலும், ஏரி கரைகளை பலப்படுத்துவதால், விவசாயத்தை பெருக்குவது; அதிக லாபம் பெறும் வகையில் தண்ணீரை சேமித்து பயிரிடுவது; புதிய வழிமுறைகள்; மாற்று பயிர்முறை ஆகியவை குறித்தும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏரிகளை சீரமைக்கும் பணி முடிவதற்குள், விவசாயிகளை ஒருங்கிணைத்து, ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்கம் அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டது.
விவசாயிகள் பட்டியல்பணிகள் முடிந்தவுடன், இச்சங்கத்தினரிடம், ஏரிகள் ஒப்படைக்கப்படும். அதன்பின், ஏரி பராமரிப்பை அவர்களே பார்த்து கொள்வர். இதற்கு, அரசும் நிதி அளிக்கும். இந்த நடவடிக்கை மூலம், சமூக விரோதிகளிடம் இருந்து ஏரிகள் காக்கப்படும். தமிழகம் முழுவதும், ஒவ்வொரு வடிநில கோட்டத்திலும், இச்சங்கம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு, சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர், நன்செய் நிலத்தில் பயிரிட கூடிய விவசாயிகளின் பட்டியலை, பொதுப்பணி துறைக்கு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், இச்சங்கம் ஏற்படுத்தப்படுகிறது.
ஆனால், அடையாறு மற்றும் கூவம் துணை வடிநில திட்டங்களில், நன்செய் நிலத்தில் பயிரிட கூடிய விவசாயிகளின் பட்டியலை வழங்குவதில், வருவாய் துறையினர் காலம் தாழ்த்தி வருகின்றனர்.பொதுப்பணி துறை அதிகாரிகள், பல முறை கோரிக்கை விடுத்தும், அவர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். வருவாய் துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால், ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்கத்தை உருவாக்கும் பணி தடைப்பட்டுள்ளது.
பராமரிப்புக்கு...இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இச்சங்கத்தில் சேர்க்கப்படும் விவசாயிகளிடம் வசூல் செய்யப்படும் நிதி, அரசு ஒதுக்கும் நிதி இரண்டும், வங்கியில் செலுத்தப்படும். அந்த நிதி, ஏரியை பராமரிக்க உதவும்.ஏரி சீரமைப்பு பணிகளை, வரும், மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஏரிகளில் குறிப்பிட்ட அளவு நீர் இருப்பு தொடர்ந்து நீடிப்பதால், சீரமைப்பு பணிகளை, ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 41 ஏரிகளில், 60 சதவீத பணிகள் முடிந்து உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.