உடுமலை:பழநியிலிருந்து உடுமலை வழியாக கோமங்கலம்புதூர் வரை சோதனை ஓட்டமாக ரயில் இயக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே தடத்தில் ரயில் செல்வதை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவை- திண்டுக்கல் அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2008ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. மடத்துக்குளம் அமராவதி ஆற்று பாலம், சண்முகநதி உள்ளிட்ட பாலங்கள் கட்டும் வேலையும், உடுமலை-மூணாறு செல்லும் ரோட்டில், பாலம் அமைக்கும் பணியும்; உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடை
பெறுகிறது.
இதில், திண்டுக்கல்-பழநி செல்லும் ரயில்பாதை பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டமாக ரயில் இயக்கப்பட்டது. பின், கடந்த செப்., மாதம் முதல் ரயில் இயக்கப்படுகிறது.
இதுபோன்று, பொள்ளாச்சி -பழநி அகல ரயில்பாதை பணியையும் விரைவில் முடித்து, ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, இந்த ரயில்பாதை பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர். தற்போது, பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருவதால், பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதில், உடுமலை கொழுமம் ரோடு முதல் மடத்துக்குளம் வரை 16 கி.மீ., தூரத்திற்கு தண்டவாளங்கள் புதியதாக அமைக்கப்பட்டிருந்தன. தண்டவாளங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, 15 ஆட்கள் மற்றும் ஹான்பூரிலிருந்து இயந்திரம்கொண்டு வரப்பட்டு, இணைக்கும் பணி நடந்தது.
இந்நிலையில், தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு, சமப்படுத்தும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. இதற்காக, லாரி மூலம் ஜல்லி கற்கள் கொண்டு வரப்பட்டு, தண்டவாளத்தில் கொட்டப்பட்டன. தண்டவாளம் இணைக்கும் பணி மற்றும் ஜல்லி கற்கள் கொட்டும் பணி நிறைவடைந்துள்ள நிலையில்,"டிராக்' மூலம் சென்று பணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
கோவை-திண்டுக்கல் அகல ரயில்பாதை அமைக்கும் பணிக்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இவ்
வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பழநியிலிருந்து, உடுமலை வழியாக கோமங்கலம்புதூர் வரை ரயில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டு வருவதை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ரயில் செல்வதை அவ்வழியாக சென்றவர்களும், அப்பகுதியில் குடியிருப்பவர்களும் வியப்புடன் பார்த்தனர்.
"பணிகள் விரைவில் முடித்து ரயில் இயக்க வேண்டும்; தளி ரோடு மேம்பால பணிகளை தாமதப்படுத்தாமல், விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.