பொள்ளாச்சி:பொள்ளாச்சி வழித்தடத்தில், இயக்கப்படும் ஒரு சில அரசு பஸ்களின் ஊழியர்கள், பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வதாக, சப்-கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து, கோவை, பழநி, உடுமலை, திருப்பூர் பகுதிகளுக்கும், சுற்றுப்புற கிராமங்களுக்கு 300 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், உள்ளூர் வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில், அறிவிக்கப்பட்ட பஸ் ஸ்டாப்களில், பஸ்கள் நின்று செல்வதில்லை என, பயணிகள் தரப்பில் அடிக்கடி புகார் எழுந்து வருகிறது.
இது குறித்து பயணிகள் தரப்பில் சப்-கலெக்டரிம் அளித்த புகார் மனு: "கிராமப்புறங்களில் இருந்து நகருக்கு இயக்கப்படும் பஸ்களில், காலை மற்றும் மாலை நேரத்தில், அறிவிக்கப்பட்ட பஸ் ஸ்டாப்களில் பஸ்கள் நிறுத்துவதில்லை. இதனால், பயணிகள் அவசர வேலைகளுக்கு செல்லும் போதும் சிரமம் ஏற்படுகிறது.
மேலும், பயணிகளை குறித்த ஸ்டாப்புகளில் நிறுத்தி இறக்கி விடுவதில்லை. மற்றொரு ஸ்டாப்பில் இறக்கி விடும் போது, மீண்டும் நடந்து வர வேண்டியுள்ளது. சில ஊழியர்கள் இது குறித்து கேட்டால், தரக்குறைவாக பேசுகின்றனர். இதனால், மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக பொள்ளாச்சி கோட்ட மேலாளர் தேவதாஸ் கூறியதாவது:
பயிற்சியின் போதே அனைத்து ஊழியர்களுக்கும், பயணிகளிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாப்களில், பஸ்கள் நின்று செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களும், இந்த முறையை பின்பற்றி வருகின்றனர். பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படும் புகாரில், எந்த ஊழியர், எந்த வழித்தட பஸ், அதன் எண் உள்ளிட்ட விபரங்கள் இல்லை. மேற்குறிப்பிட்ட விபரங்களுடன், சரியான தகவல்களை கொடுத்தால், சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விளக்கம் கேட்டு அறிவுரை வழங்கப்படும். பொதுவாக, தெரிவிக்கப்படும் கருத்துகளை கொண்டு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. பயணிகளும், ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.