பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்த தொண்டாமுத்தூர் ஊராட்சியில், மண்ணெண்ணை சரிவர வழங்காததால், ஆவேசமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட தொண்டாமுத்தூர் ஊராட்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான ரேஷன் கடை (எண்059) உள்ளது. இதில், ஊராட்சியை சேர்ந்த 877 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. நேற்று காலை இந்த கடையில், மண்ணெண்ணை வழங்கப்பட்டது.
பலருக்கு, இதை பெற, "டோக்கன்' வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஆவேசமடைந்த காலை 11.00 மணிக்கு தொண்டாமுத்தூர் வழியாக பஸ் செல்லும் ரோட்டை மறித்து, ஆண், பெண் என 150 பேர் காலி கேன்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
ரேஷன் கடையில், பொருட்கள் வாங்க வரும் கார்டுதாரர்களுக்கு, பொருட்கள் சரிவர வழங்குவதில்லை. குறிப்பாக, மண்ணெண்ணை கிடைப்பதில்லை. ஒவ்வொரு மாதமும் இதே நிலை நீடிக்கிறது. இதனால், மக்கள் தவிப்புக்குள்ளாகின்றனர். இது குறித்து கேட்டால், முறையான விளக்கமளிப்பதில்லை.
இப்பிரச்னையில், அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும். ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும், மண்ணெண்ணை வழங்க வேண்டும். அப்போதுதான், மறியலை கைவிடுவோம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த, ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், அங்கிருந்த மக்களுடனும், ரேஷன் கடை ஊழியர்களுடனும் பேச்சு நடத்தினர். இதில், ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், "மாதந்தோறும், மக்களுக்கு வழங்க இரண்டாயிரத்து 289 லிட்டர் மண்ணெண்ணை தேவையாக உள்ளது. ஆனால், இம்மாதம், 1,500 லிட்டர் மண்ணெண்ணை மட்டுமே வந்துள்ளது. கிடைக்காதவர்களுக்கு< "டோக்கன்' வழங்கப்பட்டு, அடுத்த மாதம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்,' என்றனர்.
இது குறித்து, "அதிகாரிகளிடம் தெரிவித்து, அனைவருக்கும் மண்ணெண்ணை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்' என, உறுதியளித்தவுடன், காலை 11.30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. அதன்பின், அங்கிருந்த மக்களுக்கு மண்ணெண்ணை வழங்கப்பட்டது.