வால்பாறை:வால்பாறையில் உள்ள, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.
வால்பாறை நகராட்சி கூட்டம் தலைவர் சத்தியவாணிமுத்து தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சித்துணைத்தலைவர் மயில்கணேஷ், தலைமை எழுத்தர் பூபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
துணைத்தலைவர், வீரமணி (வி.சி.,), செல்வம் (தி.மு.க.,)
வால்பாறை டவுன் பகுதியில் பல இடங்களில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் சீர்கெட்டு விட்டது. வாழைத்தோட்டம் பகுதியில் சாக்கடை கழிவுகளால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பல முறை சொல்லியும் கண்டு கொள்ளவில்லை.
சுகாதார ஆய்வாளர்: துப்புறவு பணியாளர் பற்றாக்குறையிõனல் இந்த பிரச்னை நிலவுகிறது. தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தனராஜ் :(அ.தி.மு.க.,) மினிட் புத்தகம் இல்லாமல் கூட்டம் நடத்த வேண்டாம். வரவு செலவு சீட் மன்ற கூட்டத்தில் வழங்கிய பின்னர் கூட்டம் நடத்தினால் போதும்.
வீரமணி (வி.சி.,) சுதாகர், செல்வக்குமார் (தி.மு.க.,), ராஜதுரை (காங்.,):
வால்பாறையில் பொங்கல் பரிசு கிடைக்காதவர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும். இத்தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் இரண்டு நாட்களில் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் மக்களுக்கு முறையாக இவை தரப்படுவதில்லை. ரேஷன் கடைகள் முறையாக திறப்பதில்லை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்று அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர்.
சமுத்திரக்கனி, பூங்கொடி, மைதிலி (அ.தி.மு.க.,): வார்டில் எந்த ஒரு வேலையும் நடைபெறுவதில்லை. இதனால் மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. குறிப்பாக ஈட்டியார் மயானக்கூரை, வெள்ளமலை பள்ளியை சுற்றிலும் முட்புதர், தாய்முடி எஸ்டேட் பகுதியில் தெருவிளக்கு உள்ளிட்ட எந்த ஒரு வளர்ச்சிப்பணியும் நடைபெறுவதில்லை.
சுதாகர், சூரியபிரபா (தி.மு.க.,): சின்கோனா அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் நலப்பள்ளியை சுற்றிலும் முட்புதர்கள் அகற்றப்படாமல் உள்ளன. எட்டாவது வார்டில் எந்த ஒரு வேலையும் நடப்பதில்லை.
வீரமணி (வி.சி.,): எஸ்டேட் பகுதிக்குள் யானைகள் வராமல் தடுக்க அகழி வெட்ட வேண்டும். வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
கூட்டத்தில் வால்பாறை டவுன் பகுதியில் மொபைல் சிறுநீர் கழிப்பிடம் சோதனை அடிப்படையில் அமைப்பது உள்ளிட்ட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.