பொள்ளாச்சி:ஆனைமலையில், பேக்கரியில் புகுந்து ரகளை செய்ததோடு, பொருட்களை சூறையாடி, பணியாளர்களை அடித்து துவைத்த அ.தி.மு.க., கவுன்சிலரையும் அவரது நண்பரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை பேரூராட்சி ஆறாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக இருப்பவர் மணி. இவரது நண்பர் முருகேசன். இருவரும் நேற்று ஆனைமலையிலுள்ள ஒரு பேக்கரிக்கு சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தர மறுத்த கடை ஊழியர் வெற்றிச்செல்வனை அடித்தனர்.
அப்போது தடுக்க முயன்ற மற்றொரு பணியாளர் திருமலைசாமி மற்றும் குமார் ஆகியோரை இவர்கள் அடித்து உதைத்தனர். அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.
இது குறித்து, ஆனைமலை போலீசில் வெற்றிச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெயராமன், கவுன்சிலரையும், அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.