உடுமலை:உடுமலை சிந்தாமணி ரேஷன்கடை தாமதமாக திறக்கப்பட்டதால் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடுமலை நகராட்சி 18,20,21 உட்பட பல வார்டுகளுக்குட்பட்ட ஆயிரத்து 250க்கும் அதிகமான ரேஷன்கார்டுதாரர்கள் சிந்தாமணி ரேஷன் கடையில் ரேஷன் பொருட்கள் பெற்று வருகின்றனர்.ராஜேந்திரா ரோட்டிலுள்ள சிந்தாமணியின் இரண்டு கடைகள் மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. நேற்று காலை பருப்பு உட்பட பொருட்களை வாங்குவதற்காக நூற்றுக்கும் அதிகமான மக்கள் அங்கு வந்தனர்.ஆனால், கடை 10.30 மணியாகியும் திறக்கப்படவில்லை. வேதனையடைந்த மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது:சிந்தாமணி ரேஷன்கடை காலை 9.00 மணிக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால், பல மணி நேரம் தாமதமாகவே திறக்கப்பட்டு ரேஷன்கார்டுதாரர்களுக்கு உரிய பொருட்கள் கிடைப்பதில்லை.இது குறித்து பல முறை சிந்தாமணி கூட்டுறவு சங்க மேலாளரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நாள்முழுவதும் காத்திருந்தாலும் ரேஷன்பொருட்கள் கிடைப்பதில்லை.
குறித்த நேரத்திற்கு கடை திறக்கப்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலு<ம், இக்கடைகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகளவு உள்ளது. ஆளுங்கட்சியினர் உட்பட சிலர் இடைத்தரகர்களாக செயல்பட்டு கடையை முழுமையாக தத்தெடுத்து கொண்டுள்ளனர்.
உள்தாள் இணைத்தல் உட்பட அனைத்து பணிகளும் இடைத்தரகர்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்', இவ்வாறு தெரிவித்தனர்.
பொதுமக்கள் சார்பில் முறைகேடுகள் குறித்த புகார் மனு சிந்தாமணி மேலாளர் பாலகிருஷ்ணனிடம் நேற்று அளிக்கப்பட்டது.