திருமுருகன்பூண்டி ஸ்ரீசண்முகநாதர் பக்தி பேரவை சார்பில், ஐந்தாம் ஆண்டு பக்தி திருவிழா, நாகாத்தம்மன் கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது. சீதா கல்யாணம் என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி பேசியதாவது:
குறிக்கோள் இல்லாமல் வாழும் வாழ்க்கை ஒருபோதும் பயன் தராது. ஆசை அளவோடு இருக்க வேண்டும். மண், பெண், பொன் ஆகிய மூன்றின் மீது வைக்கும் ஆசை, மனிதனை பெரும் துன்பத்தில் தள்ளி விடுகிறது. ஒரு வரையறையை வைத்துக்கொண்டு வாழ்வது மனிதன் மட்டுமே. மனுதர்மம், வாழ்க்கை நெறிமுறைப்படி, ஒழுக்கமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி மட்டுமே.
குழந்தைகளுக்கு உணவூட்டும்போது, பாரம்பரியம், பண்பாட்டை ஊட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகள் கூட்டத்தோடு வளர்ந்தால், கலாசாரம், பண்பாடு, விட்டுக்கொடுத்தல், ஒழுக்கம் ஆகியவற்றோடு வளரும். இளமைக்காலத்தில், குழந்தைகளின் மனதில் பதியும் விஷயங்கள், அவர்கள் பெரியவர்களானதும் பிரதிபலிக்கிறது. இறைவன் இருக்கிறார் என ஒரு நொடி கூட மறக்காமல், வணங்கி வாழ்பவன் பேரானந்த பெருவாழ்வு அடைவான்.
கடன், பகைவன், நெருப்பு ஆகிய மூன்றிலும் மிச்சம் வைக்கவே கூடாது. சிங்கத்தை வலை விரித்தும், கரடியை கண்ணாடி காட்டியும், யானையை குழி தோண்டியும் பிடிக்க முடியும். மனிதர்களை பாராட்டினால் போதும்; அன்பு மிகுதியால் அனைத்தும் நல்லதே நடக்கும். ஓரறிவு படைத்த மரம், எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், நிழல், கனிகளை தரும்போது, ஆறறிவு படைத்த நாம், எவ்வளவு செய்ய வேண்டும் என்பதை எண்ணிப்பாருங்கள். நமக்கு வரும் துன்பங்கள், பிரச்னைகளை பிறரிடம் கூறினால், நமக்கு பாரம் குறையும்; நிம்மதி கிடைக்கும். ஆசைகளை அளவோடு வளர்த்து, வாழ்ந்தால், நல்லது நடக்கும் என்று ராமாயணம் நமக்கு உணர்த்துகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
சேக்கிழார் புனிதர் பேரவை நிறுவனர் முத்துநடராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணை தலைவர் விஸ்வநாதன், திருமுருகநாத சுவாமி கோவில் முன்னாள் அறங்காவலர் கணேஷ், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். பக்தி பேரவை தலைவர் ஆறுமுகம் வரவேற்றார்.