"தானே புயலும், நீலகிரி நிலச்சரிவும்' என்ற தலைப்பில், ஓவியர் தமிழரசன் வரைந்த ஓவியக்கண்காட்சி, திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
இயற்கையை பாதுகாப்பது மனிதனின் கடமை; இயற்கையை சுய லாபங்களுக்காக அழிப்பது, மனித வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விளக்கும் வகையில் நடந்த அக்கண்காட்சியில், 50 ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. மாணவர்கள் ஏராளமானோர், ஓவியங்களை பார்வையிட்டனர். இயற்கையை அழிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, அவர்களுக்கு விளக்கப்பட்டது.
ஓவியர் தமிழரசன் கூறுகையில்,""இயற்கையை காப்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஓவிய கண்காட்சி நடத்தி வருகிறேன். இயற்கை தொடர்பாக ஒரு தலைப்பை மையப்படுத்தி, 50 ஓவியங்கள் வரைந்து, அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண்காட்சி நடத்தி வருகிறேன்,'' என்றார்.
துவக்க விழாவுக்கு நஞ்சப்பா பள்ளி தலைமை ஆசிரியர் துரைசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சம்பத்ராஜ் வரவேற்றார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், கண்காட்சியை துவக்கி வைத்தார். ஆசிரியர் சிவராஜன் நன்றி கூறினார்.