முருகம்பாளையம் பகுதியில், புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பிடம், இரண்டு மாதத்துக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது.
திருப்பூர் மாநகராட்சி, நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட 55வது வார்டில் பெரியார் நகர் உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. போதிய கழிப்பிட வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள், இப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் அமைத்துக் கொடுக்கும்படி, மாநகராட்சி அதிகாரி மற்றும் கவுன்சிலரிடம் கோரிக்கை விடுத்தனர். எட்டு லட்சம் ரூபாய் செலவில், புதிய கழிப்பிடம் கட்டப்பட்டது. இரண்டு மாதத்துக்கு மேலாகியும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.
நான்காவது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகத்திடம் கேட்டபோது,""சுண்டமேடு பகுதியில் 12 லட்சம் ரூபாயிலும், பெரியார் நகரில் எட்டு லட்சம் ரூபாயிலும் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணி முடிந்து, "போர்வெல்' கிணற்றில் இருந்து கழிப்பிடத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி முடிவடைந்துள்ளது. மின் இணைப்பு பெறப்பட்டு, தண்ணீர் பம்ப்பிங் செய்து, "டெஸ்டிங்' செய்யும் பணி நடந்து வருகின்றன. இன்னும் ஓரிரு நாளில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். அதன்பின், கழிப்பிடம் திறக்கப்படும்,'' என்றார்.