சென்னை : ""அரியானாவை
போலவே, தமிழகத்திலும், பார்வையற்ற ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை, 60 ஆக
உயர்த்த வேண்டும்,'' என, பார்வை யற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் விஜயகுமார்
கூறினார். பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில், பணி ஓய்வு பெறும்
மூத்த ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, மாநில கல்லூரியில், கடந்த, 27ம்
தேதி நடந்தது. நிகழ்ச்சி முடிவில், பார்வையற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்
விஜயகுமார் கூறியதாவது:
பார்வையற்ற ஆசிரியர்கள் பயண படிக்காக, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகையை பெறுவதில், பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. இதை எளிமைப்படுத்தும் வகையில், அடையாள அட்டையின் நகலை பெற்று கொண்டு, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர்கள்பயணப்படி வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்வையற்ற சிறப்பு பள்ளிகளில் பயிலும், பார்வையற்ற மாணவர்களுக்கான, சுற்றுலா நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். அரியானாவில், அரசு ஊழியராக பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளின் ஓய்வு பெறும் வயது, 60 என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, தமிழகத்தில் பணியாற்றும் பார்வையற்ற ஆசிரியர்களின், ஓய்வு பெறும் வயதை, 60 ஆக உயர்த்த வேண்டும்.
சிறப்பு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை
எடுக்க வேண்டும். மத்திய அரசு பள்ளிகளில் வழங்குவது போல, பார்வையற்ற பள்ளி
ஆசிரியர்களுக்கு, வாசிப்பாளர் உதவித் தொகையாக மாதந்தோறும், 1,500 ரூபாய்
வழங்க வேண்டும். அரசு பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்த
வட்டியில், வீட்டு கடன் வழங்க ஆவன செய்ய வேண்டும்.
பார்வையற்றவர்கள்,
கல்வியை முடித்து பணியில் சேர்வதற்கு மிகவும் தாமதமாவதால், 20 ஆண்டுகள்
பணி நிறைவு செய்தாலே, முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார்.