உடுமலை:உடுமலை அருகே, பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், நிலவும் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இஸ்ரேல் தொழில் நுட்பத்தில், மாதிரி கிராமம் அமைக்கும் பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் திருப்பூர், கோவை மாவட்டத்திற்குட்பட்ட 3.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திட்டப்பகுதி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மண்டலங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
இதனால், விளைநிலங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 35 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் வாய்க்காலில் திறக்கப்படுகிறது. ஒதுக்கீடு அடிப்படையில், ஒரு விவசாயின் நிலத்திற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து சில மணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைக்கும்.
இத்தகைய காரணங்களால், ஒரு லட்சம் ஏக்கர் வரையிலான பரப்பில், சாகுபடி கைவிடப்படும் நிலை உள்ளது. குறைந்து வரும் பருவமழை காரணமாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகளுக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, பி.ஏ.பி., திட்டம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தண்ணீர் விரயத்தை குறைத்து, சாகுபடி மேற்கொள்ள வாகத்தொழுவு பாசன சபை விவசாயிகள் புதிய திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து வாகத்தொழுவு பாசன சபை தலைவர் கந்தசாமி கூறியதாவது: பி.ஏ.பி., பாசனப்பகுதியில், பிரதானமாக உள்ள தென்னை சாகுபடிக்கு பாசன காலம் தவிர்த்து பிற நாட்களில் கிணற்று தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
வாகத்தொழுவு பாசன சபையிலுள்ள ஆயிரத்து 800 ஏக்கரில், 90 சதவீதம் தென்னை சாகுபடியாகும். தென்னை மரங்களுக்கு இஸ்ரேல் தொழில்நுட்பத்தில், அனைத்து விவசாயிகளும் நுண்ணீர் பாசனம் அமைத்து வருகின்றனர்.
பி.ஏ.பி., பாசனத்தில் பெறப்படும் தண்ணீரை கிணறுகளில் நிரப்பி, நுண்ணீர் பாசனத்தின் மூலம் மரங்களுக்கு பாய்ச்சுவதால் விரயம் வெகுவாக குறைக்கப்படும். எங்களது கிளை வாய்க்காலில், இரண்டு மண்டலங்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை ஆண்டுமுழுவதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிரித்தளித்தால், இத்திட்டம் வெற்றியடையும்.
இலவச மின்சார பயன்பாடு குறைதல், சாகுபடி பரப்பு அதிகரித்தல் போன்ற பல்வேறு நன்மைகள் இத்திட்டத்தால் கிடைக்கும். நுண்ணீர் பாசனத்தில் மாதிரி கிராமமாக இப்பகுதியை மாற்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.