வால்பாறை:வால்பாறை அருகே, ஆட்டோவை காட்டு யானைகள் ஆவேசத்தில் அடித்து நொறுக்கியது.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது கேரளா மளுக்கப்பாறை எஸ்டேட். சாலக்குடியிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு 8.00 மணிக்கு மளுக்கப்பாறை வருவதற்காக கண்ணன் என்பவரின் ஆட்டோவில் இரண்டு பயணிகள் வந்தனர்.
சாலக்குடி இலஞ்சிப்பாறை- ஆனைக்கயம் அருகே ஆட்டோ வரும் போது, எதிரே காட்டு யானைகள் கூட்டம் ரோட்டை வழி மறித்தது.
யானையை கண்டதும் ஆட்டோ டிரைவர் மற்றும் பயணம் செய்த இருவரும் ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு, ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் நேற்று அதிகாலையில் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகளுடன் டிரைவர் வந்து பார்த்த போது, ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியிருப்பது தெரிய வந்தது.
ஆனைக்கயம் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,
"சாலக்குடி- வால்பாறை ரோட்டில் இரவு நேரத்தில் யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. எனவே இரவு நேரத்தில் டூவீலர் மற்றும் ஆட்டோக்களில் யாரும் செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி இரவு நேரத்தில் பயணம் செய்வதால், இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன' என்றனர்.