தாம்பரம் : "முதல்வர்
உத்தரவுப்படி, தாம்பரம், ரங்கநாதபுரம் மருத்துவமனையை, 24 மணி நேர சேவை
மையமாக மாற்ற வேண்டும்' என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம் உள்ளிட்ட, 13 நகராட்சிகளில்
ஒவ்வொன்றிலும், தற்போது இயங்கி வரும் சுகாதார மையங்களில், ஒரு சுகாதார மையத்தை, 24 மணி நேர மையமாக மாற்றுவதற்கு முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
தாம்பரத்தில்,
ரங்கநாதபுரம், படேல் நகர், கிழக்கு தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில்
சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், கிழக்கு தாம்பரம் சுகாதார
மையம், ஏற்கனவே, 24 மணி நேரம் இயங்கி வருகிறது.
ரங்கநாதபுரம் மருத்துவமனையை, தினசரி
நூற்றுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி
வருகின்றனர். அதிக படுக்கைகளுடன் கூடிய மகப்பேறு மருத்துவமனையாக மாற்றும் பணிகள் நடந்து
வருகின்றன.
மகப்பேறு
மருத்துவமனை அமைந்தால், ரங்கநாதபுரம், கஸ்தூரிபாய் நகர், கடப்பேரி,
புலிகொரடு, பழைய தாம்பரம் உள்ளிட்ட பகுதி மக்கள் பயனடைவர்.
தாம்பரம்
நலஉரிமை நலச்சங்க பொது செயலர் ராஜன்மணி கூறுகையில்,""ரங்கநாதபுரம் மற்றும்
அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏழைகளும் வசதி படைத்தவர்களும் வசிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த மருத்துவமனையை, 24 மணி நேர சேவையாக மாற்றினால், பெண்கள்
பெரும் பயனடைவர்,''என்றார்.