அன்னூர்: மழை இல்லாததாலும், நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றதாலும், கரும்பு மற்றும் சோளப்பயிர்கள் அன்னூர் பகுதியில் கருகி வருகின்றன.
அன்னூர் வட்டாரத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பில், கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையுடன், ஒப்பந்தம் போட்டு பயிரிடப்பட்டுள்ளன. 20 சதவீதம் விவசாயிகள், நாட்டுசர்க்கரை, வெல்லம் உற்பத்திக்கு, கரும்பு பயிரிட்டுள்ளனர். 2012ல், தென் மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. வடகிழக்கு பருவ மழையும் பெய்யவில்லை.
வழக்கமான மழையில் 50 சதவீத அளவுக்கே பெய்ததால், மானாவாரியான சோளம், நிலக்கடலை மற்றும் பருத்தி பயிர்கள் கருகி வருகின்றன. கிணற்றுப்பாசனத்தை நம்பி, கரும்பு பயிரிட்ட விவசாயிகள், கரும்பு பயிர் கருகி வருவதால் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
காளக்குறிச்சி, தட்டான் தோட்டத்து விவசாயி வேலுச்சாமி கூறியதாவது:
கடந்த ஒரு ஆண்டாக போதுமான மழை இல்லை. கிணற்றில் இருந்த நீர் மளமளவென குறைந்து விட்டது. முன்பு வாரம் இருமுறை மூன்று முதல் நான்கு மணி நேரம் கிணற்றில் இருந்து, கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தோம். இப்போது அரை மணிநேரம் கூட தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.
மழையும் இல்லாமல், கிணற்றில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டதால், கரும்பு பயிர் தண்ணீர் கிடைக்காமல் கருகி விட்டது. இனி மேல் மழை
பெய்தாலும், இந்த பயிர் உயிர் பிடிக்காது.
கரும்பு பயிருக்கு முதல் உழவு 4,000 ரூபாய் செலவிலும், எரு இடுதல் 15 ஆயிரம் ரூபாயிலும், கரணை நடுதல் 10 ஆயிரம் ரூபாயிலும், இரண்டு முறை சோகை உரித்தல் 10 ஆயிரம் ரூபாயிலும், வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சுதல், 20 ஆயிரம் ரூபாயிலும் செய்துள்ளோம். இத்துடன், களை வெட்டுதல், உரம் இடுதல், பார் வெட்டுதல், கரும்பு வெட்டுக்கூலி என ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
கரும்பு பயிர் கருகியதால், அன்னூர் வட்டார விவசாயிகளின் எட்டு மாத உழைப்பும், கரணை, உரம், பார் வெட்டுதல், களை எடுத்தல் ஆகியவற்றுக்கு செய்த செலவும் வீணாகி விட்டது. கருகிய கரும்பு பயிர்களை அப்புறப்படுத்த பல ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இனி வரும் மே, ஜூன் வரை வேறு பயிரும் பயிரிட முடியாது. வறட்சியால், நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயி தெரிவித்தார்.
பசூர், அம்மா செட்டிபுதூர், வடக்கலூர், பாசக்குட்டை உள்ளிட்ட அன்னூரின் வடக்கு பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, சோளம், மக்காச்சோள பயிர்கள் கருகி விட்டன. விவசாயிகள் செய்வதறியாமல் உள்ளனர்.