திருப்பூர்:திருப்பூர், ஆலாங்காடு பகுதியில் உள்ள "டாஸ்மாக்' மதுக்கடையை மூட வலியுறுத்தி, பொதுமக்கள்
முற்றுகை போராட்டம் நடத்தினர். மூன்று மாதத்துக்குள் அக்கடையை இட மாற்றம் செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்த பின், அவர்கள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் நடராஜா தியேட்டர் ரோடு, ஆலாங்காடு பகுதியில்
"டாஸ்மாக்' மதுக்கடை (எண்: 1959) உள்ளது. இக்கடையில், பார் வசதி இல்லை. அதற்காக நடத்தப்பட்ட ஏலம் மற்றும் டெண்டரில் தொகை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதால், ஏலம் போகவில்லை. இதனால்,
"குடி'மகன்கள், கடையின் முன்புறம் மற்றும் தெருமுனைகளில் திறந்த
வெளியில், நடைபாதையில் அமர்ந்து மது அருந்துவதும், தகராறு செய்வதும், நடைபாதையை
அசிங்கப்படுத்துவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன.
பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 100 பேர், மதுக்கடையை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் சிங் ஆகியோர் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினர்.
மதுக்கடையை இட மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள்
உறுதியாக வலியுறுத்தினர்.
தாசில்தார் மோகன், "டாஸ்மாக்' மாவட்ட மேலாளர் (பொறுப்பு) மாரியப்பன் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் நடத்திய பேச்சில், மூன்று மாத அவகாசத்துக்குள், வேறிடம் ஏற்பாடு செய்து, கடை மாற்றம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மதுக்கடைக்கு வரும் நபர்கள், அப்பகுதியில் ஏதேனும் பிரச்னை செய்தால், தொடர்பு கொள்ள, போலீஸ்
ஸ்டேஷன் மற்றும் ரோந்து போலீஸ் வாகனங்களின் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டன. இதையடுத்து சமாதானமடைந்த பெண்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரணமாக, அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.