மடத்துக்குளம்:மடத்துக்குளத்தில் பராமரிப்பு இல்லாத அமராவதி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல்-கோவை (209) தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதி திருப்பூர் மாவட்ட எல்லையிலும் மறுபகுதி திண்டுக்கல் மாவட்டத்திலும் உள்ளது.
இந்த பாலம், பலஆண்டு கட்டுமானப் பணிகளுக்கு பின் 1986 ம் ஆண்டு திறக்கப்பட்டது. இது 12 தூண்களுடன் 152 மீ., நீளம்,10 மீ., அகலத்துடன் உள்ளது. ஆற்று நீர் தடையின்றி செல்ல தூண்களுக்கிடையே 21 மீ.,இடை வெளியில் ஏழு கண்மாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, இந்த பாலத்தை கனரக வாகனங்களும், அதிகளவு போக்குவரத்து வாகனங்களும் பயன்படுத்தி வருகின்றன. அப்போதைய அதிகாரிகளால் எதிர் வரும் ஆண்டுகளில் பாலத்தை பயன் படுத்தும் வாகனங்கள் குறித்து ஒரு கணக்கீட்டில் பாலம் கட்டப்பட்டது.
ஆனால், மதிப்பீட்டுக்கும் அப்பாற்பட்ட வாகனங்கள் தற்போது உருவாகி போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பாலம் உறுதி இழந்து பராமரிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.
கன ரக வாகனங்கள் இதை கடக்கும் போது, பாலம் "அதிர்வு'களை தருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் டு-வீலர்களில் செல்பவர்களும் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இதன் பாதுகாப்பு சுவர்கள் பல இடங்களில் உடைந்து காணப்படுகின்றன.
வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது:
பால ரோட்டில் பல இடங்களில் விரிசலும், சில இடங்களில் பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. நடைபாதையில் உள்ள சிமென்ட் தளங்கள் பெயர்ந்துள்ளன. இரவு நேரத்தில் நடைபாதையில் செல்லும் மக்கள் டுமாறி விழுந்து செல்கின்றனர்.
மோசமான நிலையில் பாலம் உள்ளது குறித்து உடனடியாக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும், செய்திகள் வெளியாகியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பாலத்தில் பராமரிப்பு நடவடிக்கை உடனடியாக மேற்கொண்டால் பல விபத்துக்கள் தடுக்கப்படும்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், " அமராவதி ஆற்றுப்பாலத்தை புதுப்பிக்க, முன் மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது ' என்றனர்.