உடுமலை:புக்குளம் ஊராட்சியில், உள்ளூர் நீராதாரத்தில் கிடைக்கும் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது; கூட்டுக்குடிநீர் திட்டமும் கைவிட்டுள்ளதால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம் புக்குளம் ஊராட்சியில், 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சிக்கு அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
பல்வேறு காரணங்களால், கடந்த ஒரு மாதமாக கூட்டுக்குடிநீர் திட்டத்தில் போதுமான குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனையடுத்து, உள்ளூர் நீராதாரமான போர்வெல் தண்ணீரை குடிநீராக வினியோகிக்க ஊராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டனர்.
ஆனால், வறட்சி காரணமாக 6 போர்வெல்களில் 4 போர்வெல்கள் வற்றி விட்டன. சமீபத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட போர்வெல்லில் தண்ணீரை இறைக்கும் போது, தண்ணீர் செம்பழுப்பு நிறத்தில் வெளியேறியது.
இதனால், அதிர்ச்சியடைந்த ஊராட்சி நிர்வாகத்தினர் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தும் முயற்சியை கைவிட்டனர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால், கூட்டுக்குடிநீர் திட்டம் மட்டுமே கைகொடுக்கும் நிலை உள்ளது.
அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சீரான வினியோகம் வழங்க கோரி ஊராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இப்பிரச்னைகளால், புக்குளம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கிராம மக்கள் குடிநீருக்காக 3 கி.மீ., தூரம் நடந்து சென்று உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட குறிஞ்சேரி கிராமத்திலிருந்து குடிநீர் பிடித்து வருகின்றனர்.
மேலும், 40 லிட்டர் கேன் 20 ரூபாய் என விற்கப்படும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் வேதனைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், கடைக்கோடியில் புக்குளம் ஊராட்சி அமைந்துள்ளது. இதனால், பற்றாக்குறை வினியோகமே தொடர்கதையாக உள்ளது.
போர்வெல்கள் அனைத்தும் கைவிட்டுள்ள நிலையில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தற்காலிகமாக சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.