உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லூரியில், இளநிலை இரண்டாமாண்டு பயிலும் 760 மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப் (மடிக்கணினி) வழங்கப்பட்டது.
உடுமலை அரசு கலைக்கல்லூரியில், இளநிலை இரண்டாமாண்டு மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப் (மடிக்கணினி) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் அன்பழகன் வரவேற்றார்.
எம்.பி., சுகுமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்து பேசுகையில்,""
கல்வித்துறைக்காக அதிகளவு நிதி ஒதுக்கியதுடன், மாணவர்கள் நலனுக்காக லேப்-டாப் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. மென்பொருள் பயிற்சிக்காக தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 30 கல்லூரிகளில், உடுமலை அரசு கலைக்கல்லூரியும் ஒன்றாகும். போட்டி நிறைந்த உலகில், வெற்றி பெற பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும்,'' என்றார்.
மடத்துக்குளம் எம்.எல்.ஏ., சண்முகவேலு பேசுகையில்,"" மாணவர்கள் படித்து நல்ல மதிப்பெண்களை பெறுவதே குறிக்கோளாக இருக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரியில், பெண்கள் அதிகளவு படிப்பதால், தனியாக பெண்களுக்கென கல்லூரி நேரத்தில் பஸ் இயக்க கல்லூரி முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிக்கு புதிய வகுப்பறை கட்டடம், கூடைப்பந்து மைதானம், பெண்களுக்கென தனி கேண்டின் வசதி, ஆண்கள், பெண்கள் கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று, நிறைவேற்றப்படும்,'' என்றார். வருவாய் கோட்டாட்சியர் லதா நன்றி கூறினார். தொடர்ந்து, மாணவ, மாணவியர் 760 பேருக்கு விலையில்லா லேப்-டாப் வழங்கப்பட்டது. இதில், நகராட்சி தலைவர் ஷோபனா, துணைத்தலைவர் கண்ணாயிரம், தாசில்தார் சைபூதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பாக்ஸ்...
"ஒரு மணி நேரம் காத்திருந்த மாணவர்கள்'
உடுமலை அரசு கலைக்கல்லூரியில், விலையில்லா லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை 10:30 மணிக்கு துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கல்லூரி மாணவ, மாணவியர் அரங்கிற்குள் உட்கார வைக்கப்பட்டனர். விழாவிற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் அமரும் வகையில், மேடையில் சேர்களும் போடப்பட்டன; ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் இருந்தது.
மாவட்ட கலெக்டர் உட்பட அனைவரும் காலதாமதமாக வந்ததால், ஒரு மணி நேரத்திற்கு பின்பு விழா துவங்கியது. இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாணவர்கள் காத்திருந்தனர். அரசு விழா என்றாலே, காலதாமதமாக துவங்கும் என்பது சம்பிராதயமாக மாறி வருகிறது. இதனால், அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, விழாவை காண வரும் அனைவரது நேரம் வீணாகி வருகிறது. எனவே, கால நேரத்தை வீணாகாமல் இருக்க குறிப்பிட்ட நேரத்தில் விழா துவங்கி,முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.