திருப்பூர்: திருப்பூர், ஜனசக்தி நகர், பள்ளி அருகில் பி.ஏ.பி., வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், குழந்தைகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர், பழவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள மூகாம்பிகை நகர், கே.எஸ்.நகர், ஆசிரியர் காலனி, ஜனசக்தி நகர் வழியாக பி.ஏ.பி., வாய்க்கால் செல்கிறது. இப்பகுதிகள் விவசாய பூமிகளாக இருந்த போது, வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் வந்தது. காலப்போக்கில் விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளாக மாறியதால், வாய்க்காலில் பல ஆண்டுகளாக தண்ணீர் வருவதில்லை.
அதனால், நான்கு குடியிருப்புகளின் கழிவுநீர், விவசாய நிலத்தின் வழியாக செல்லும் வாய்க்காலில் சென்றது. இதிலிருந்து துர்நாற்றம் வீசியதால், இடத்தின் உரிமையாளர் வாய்க்காலில் மண் கொட்டி கழிவுநீர் செல்லாதவாறு அடைத்து விட்டார்.
கழிவுநீர் செல்ல வழியில்லாததால், வாய்க்காலில் தேங்கி நிற்கிறது. இதனால், துவக்கப்பள்ளி, குழந்தைகள் நல மையம் ஆகியவற்றின் அருகேயுள்ள வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியுள்ளது. அதிலிருந்து ஏற்படும் துர்நாற்றத்தால், பள்ளிக் குழந்தைகளும், பொது மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பெற்றோர் கூறுகையில்," பி.ஏ.பி., வாய்க்காலில் கழிவுநீர் செல்லாதவாறு தனியார் அடைத்து விட்டதால், வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியுள்ளது. மழை காலத்தில் கழிவுநீருடன், மழை நீரும் சேர்ந்து, வாய்க்காலில் செல்ல வழியில்லாமல், துவக்கப்பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு, இவ்வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது.
ஆசிரியர் காலனியிலிருந்து வீரபாண்டி ஓடை அல்லது கே.செட்டிபாளையம் பள்ளம் அல்லது சங்கிலிப்பள்ளத்துக்கு, கழிவுநீர் கொண்டு செல்ல, சாக்கடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் உ<ரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.