திருப்பூர்:திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளர் பற்றாக்குறை நிலவுவதால், பணிகளை முடிப்பதில் தாமதம் நிலவுகிறது.
திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம், பல்லடம் ரோடு, தமிழ்நாடு தியேட்டர், கருப்பகவுண்டம்பாளையம், கரைப்புதூர், வீரபாண்டி, அருள்புரம், கூடுதலாக பல்லடம், பொங்கலூர், காட்டூர், காட்டூர்புதூர், உகாயானுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியது
கால்நடைத்துறையின் சொந்த கட்டடத்தில் வாடகைக்கு செயல்படும், அதில், ஆர்.டி.ஒ., மற்றும் நான்கு முதல் ஆறு ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். மூன்று பேர் மட்டுமே உள்ளனர். ஒருவர் விடுமுறையில் சென்று விடும்போது, மற்றவர், அலுவலகம் மற்றும் உயரதிகாரிகள் கூட்டம், என வெளியே செல்லும் போது பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
மூன்றாவது ஆய்வாளர் அலுவலக கோப்புகளை முடித்துவிட்டு, அன்றைய தினம் லைசன்ஸ் பெற வருபவர்கள் விண்ணப்பங்களை சரிபார்க்க வேண்டும்; மைதானத்துக்கு சென்று லைசென்சுக்காக "எட்டு' போடுவோரை கண்காணித்து, அவர்களது விண்ணப்பங்களில் கையொப்பம் இட வேண்டும்.
ஒரே ஆய்வாளர் பல பணிகளை மேற்கொள்ளும்போது, அலுவல்களில் தேக்கம் ஏற்படுகிறது. சில நேரங்களில் முழுமையாக ஆய்வு செய்ய முடியாத சிக்கலும் ஏற்படுகிறது. குறைந்தது ஐந்து ஆய்வாளர்கள் இருந்தால் மட்டுமே பணியை விரைவாக முடிக்க முடியும். எனவே, தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு தேவையான ஆய்வாளர்களை நியமிக்க, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.