திருப்பூர்:"படிக்கும் காலத்தில், மாணவர்களுக்கு கவனச்சிதறல் இருக்க கூடாது,' என, கொரியா நாட்டை சேர்ந்த பேராசிரியர் அறிவுறுத்தினார்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் வேதியியல் மன்ற துவக்க விழா நடந்தது; கல்லூரி முதல்வர் மனோகரன் தலைமை வகித்தார். துறை தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மன்ற தலைவர் சரவணன் வரவேற்றார்.
கொரியா, சியோலில் உள்ள கூக்மின் பல்கலை., பேராசிரியர் டேனியல் தங்கதுரை "நம் வாழ்க்கையில் லட்சியங்களை அடைவது எப்படி?' என்ற தலைப்பில் பேசியதாவது;
மாணவர்கள் தங்களுடைய இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அந்த இலக்கை அடைய கடுமையாக முயற்சிக்க வேண்டும்; அதற்கான வழிமுறைகளை உருவாக்கி கொண்டு, அந்த வழியில் முன்னேற வேண்டும். இளம்பருவத்தில், கவனக்கூர்மை மிக முக்கியம். படிக்கும் காலகட்டத்தில், மாணவர்களுக்கு கவனச் சிதறல் இருக்க கூடாது. எதை செய்தாலும், அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
தோல்வியை எதிர்கொண்டாலும், அதில் இருந்து நல்ல பாடங்களை கற்றுக் கொண்டு அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; சவால்கள் நிறைந்த வாழ்க்கையில்தான், திறமைகளை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கிறது. அதை மாணவர்கள் புரிந்துகொண்டு, எதிர்கால லட்சியங்களை அடைய, தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.
வாழ்க்கைக்கு உதவக்கூடிய புத்தகங்களை படிப்பது, மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும்; நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் வெற்றி, தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும், என்றார். மன்ற செயலாளர் பிரியா நன்றி கூறினார்.