ஏற்றுமதி வர்த்தகம் சரிவடைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த, தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இந்தியாவின் ஏற்றுமதி 5.5 சதவீதம் சரிவடைந்து, 21,410 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, நடப்பு நிதியாண்டுக்கான இலக்கில் 59 சதவீதமாகும். எனவே, இந்தாண்டு ஏற்றுமதி இலக்கை எட்டுவது கடினமாகி உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில், ஏற்றுமதியில் பங்கு 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. பொருளாதார வலிமையில், ஆசியா அளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஏற்றுமதி வர்த்தகம் சரிவடைந்து வருவதால், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரக்குகள் மற்றும் சேவைகளில் மொத்த இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசம் அதிகரித்துள்ளது; உள்நாட்டு கணக்கு பற்றாக்குறை 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு, அதிகளவில் டாலர் தேவைப்படுகிறது. இதனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பும் சரிவடைந்து, பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில், தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், அதில் ஈடுபட்டுள்ள சில முக்கிய துறைகளுக்கு வழங்கப்பட்டுவரும் வட்டி சலுகையை மத்திய அரசு மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டித்துள்ளது. இறக்குமதியை கட்டுப்படுத்துவது அவசியம் என்றாலும் ஏற்றுமதியை அதிகரித்து, நடப்பு கணக்கு பற்றாக்குறையை சீராக்குவதே சிறந்த வழிமுறை என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.