சுல்தான்பேட்டை: சுல்தான்பேட்டையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கிராமிய சித்த மருத்துவமனையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையில், 1982ல் தன்னிறைவு திட்டத்தின் கீழ் அரசு கிராமிய சித்த மருத்துவமனை திறக்கப்பட்டது. ஒரு டாக்டர், இரு உதவியாளர், ஒரு செவிலியர் என நான்கு பேர் பணிபுரிந்து வந்தனர். சுல்தான்பேட்டை, காமநாயக்கன்பாளையம், வாரப்பட்டி, பச்சார்பாளையம், தாசநாயக்கன் பாளையம், சந்திராபுரம், மேட்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். தினமும் சராசரியாக 50 பேர் சிகிச்சை பெற்றனர்.
எவ்வித அறிவிப்பும் இன்றி, இரண்டு ஆண்டுக்கு முன் மருத்துவமனை பூட்டப்பட்டுள்ளது. தற்போது, அக்கட்டடம் போதிய பராமரிப்பு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டடத்தில் மராமத்து பணி செய்து சித்த மருத்துவமனையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோவை கலெக்டருக்கு சுல்தான்பேட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.